பஞ்சாபில் பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவதாக கூறிய வாக்குறுதியை ஆம் ஆத்மி அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்று மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு குற்றம் சாட்டி உள்ளார்.
தலைநகர் டெல்லியில் வரும் ஜனவரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு ஆளும் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, பஞ்சாபின் லூதியானாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆம் ஆத்மி சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன. குறிப்பாக ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதி உதவி வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் இதுவரை பெண்களுக்கான உதவித் தொகை வழங்கப்படவில்லை. இந்த சூழலில் தற்போது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி இதுபோன்ற வாக்குறுதியை கேஜ்ரிவால் அளித்திருக்கிறார். பஞ்சாபில் ரூ.1,000 வழங்குவதாக கூறிய வாக்குறுதியை ஆம் ஆத்மியால் நிறைவேற்ற முடியவில்லை. அந்த கட்சியால் டெல்லி பெண்களுக்கு மாதம் ரூ.2,100 எப்படி வழங்க முடியும்?
வாக்காளர்களை ஏமாற்றுவதற்காக பஞ்சாபை போன்று டெல்லியிலும் போலி வாக்குறுதிகளை கேஜ்ரிவால் அள்ளி வீசுகிறார். அவரை நம்பி ஏமாற வேண்டாம் என்று டெல்லி மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார்.