புதுச்சேரி: தமிழக திமுக அரசை கண்டித்து புதுச்சேரியில் அதிமுக ஆர்ப்பாட்டத்தில், “மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மவுனம் சாதிப்பது ஏன்?” என்று அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. சென்னை அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக தமிழக திமுக அரசை கண்டித்தும், அரசியல் இடையூறின்றி நீதி வழங்கிட சிபிஐ விசாரணை வேண்டியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில துணைத்தலைவர், முன்னாள் எம்எல்ஏ ராஜாராமன், முன்னாள் எம்.எல்.ஏ கோமளா உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் தமிழக திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியது: “மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை காவல் துறை எடுத்துள்ளது தவறான செயல். முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத் தீர்ப்புக்கு நேர்மாறாக வெளியிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தை போலீஸார் களங்கப்படுத்தியுள்ளனர். இது புகார் அளித்த பெண்ணின் குடும்பத்தினருக்கு காவல் துறையால் விடுத்த எச்சரிக்கை நடவடிக்கையாகும். குற்றம் சாட்டப்பட்டவர் பேசிய சார் யார் என இதுவரை தெரியவில்லை. இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்கும். இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக முதல்வர் இன்று வரை வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்?
திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இவையெல்லாம் வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் திரிபுரா, மணிப்பூர் எங்கேயாவது ஒரு பெண் பாதிக்கப்பட்டால் வாயில் போராடியிருப்பார்கள். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.