சீயோல்: தென் கொரியாவில் இன்று (டிச.29) காலை ஏற்பட்ட விமான விபத்தில் 179 பேர் பலியாகினர். விமானத்திலிருந்து 2 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை தெரியவில்லை. விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதால் விபத்துக்கான காரணம் விரைவில் தெரியவரும்.
நடந்தது என்ன? தென் கொரிய தலைநகர் சீயோலுக்கு தெற்கே 290 கிலோமீட்டர் தொலைவில் முவான் நகரில் உள்ள விமான நிலையத்தில் ஜேஜு ஏர் பேசஞ்சர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.03 மணிக்கு, 181 பேருடன் தரையிறங்கியது. அப்போது, விமானம் எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் இருந்து விலகி சுற்றுச்சுவரில் மோதி வெடித்தது. இந்த விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி, ஒரு விமான சிப்பந்தி என இரண்டு பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். இதுவரை 82 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எஞ்சிய உடல்களையும் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
விபத்துக்குள்ளான விமானம் பாங்காக்கில் இருந்து தென் கொரியா வந்தது. அந்த விமானத்தில் தாய்லாந்து நாட்டுப் பயணிகள் இருவர் இருந்தனர் என்று தென் கொரிய விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
கருப்புப் பெட்டி கண்டெடுப்பு: விமான விபத்துக்கான காரணம் என்னவென்று உறுதி செய்யப்படவில்லை. லேண்டிங் கியர் சரியாக பணி செய்யாததால் விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுஒருபுறம் இருக்க விமானத்தின் மீது பறவை மோதி விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விமான காக்பிட் ரெக்கார்டரும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவற்றை முறையான ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படும்.
7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு: தென் கொரிய வரலாற்றில் இது மிக மோசமான விமான விபத்துக்களில் ஒன்றாக அறியப்படுகிறது. முன்னதாக, கடந்த 1997-ல் கொரியன் ஏர்லைன் விமானம் விபத்துக்குள்ளானதில் 228 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் நடந்த மிக மோசமான விமான விபத்தாக இன்று நடந்துள்ள விபத்து அமைந்துள்ளது.
இந்நிலையில் தென் கொரிய அரசானது 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையில் போப் ஃப்ரான்சிஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தென் கொரியாவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உயிர் பிழைத்தோருக்கான பிரார்த்தனைகள்” என்று தெரிவித்துள்ளார்.
விமான நிறுவனம் பொறுப்பேற்பு: ஜேஜு ஏர் சிஇஓ கிம் இ வெளியிட்ட அறிக்கையில், விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடந்த சம்பவத்துக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
விமான விபத்து தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கிம் இ உள்பட விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் அனைவரும் ஒரு சேர நின்று சிரம் தாழ்த்தி மன்னிப்பு கோரினர்.