சண்டிகர்: பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாய சங்கங்கள் நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை(எம்எஸ்பி)-க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா(அரசியல் சார்பற்றது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய சங்கங்கள் இன்று (திங்கள்கிழமை) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அந்த சங்கங்கள் அறிவிப்பு விடுத்திருந்தன. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி ஜக்கித் சிங் தலேவாலுக்கு ஆதரவாக இந்த பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து, பேருந்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜலந்தர், மொஹாலி, ஷாம்பு உள்ளிட்ட பல மாநகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருப்பதால், வெளியூர் செல்லும் பயணிகளும், அலுவலகம் செல்வோரும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பந்த் காரணமாக பல பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அல்லது இணைப்புச் சாலைகள் வழியாகச் சென்று அவர்கள் சேருமிடங்களுக்குச் செல்லுமாறும் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். மொஹாலி, பாட்டியாலா, லூதியானா, மோகா, ஃபெரோஸ்பூர், பதிண்டா, ஹோஷியார்பூர், ஜலந்தர் மற்றும் பிற இடங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டத்தில் இணைவதாக பெரும்பாலான ஊழியர் சங்கங்கள், வர்த்தகர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவ சேவைகள் போன்ற அவசர சேவைகள், விமான நிலையம் செல்லும் பயணிகள், திருமண விழாக்களுக்குச் செல்லும் வாகனங்கள், தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோர் அனுமதிக்கப்படுவார்கள் என்று கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பந்தேர் தெரிவித்திருந்தார். அந்த வகையில், அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடர்கின்றன.