பாட்னா: பிஹார் மாநிலத்தின் பிபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி பாட்னா காந்தி மைதானத்தில் போராட்டம் நடத்திய பிபிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிஹாரில் 70வது பிபிஎஸ்சி(Bihar Public Service Commission) முதல்நிலைத் தேர்வு கடந்த 13ம் தேதி நடைபெற்றது. இதில், வினாத்தாள் கசிவு, தேர்வு அறைகளில் சிசிடிவி கேமராக்கள் இயங்காதது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாகவும், எனவே நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் முதல்வர் நிதிஷ் குமாரை சந்திக்க அனுமதி வேண்டும் என்றும் கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் பாட்னா காந்தி மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வரின் வீட்டுக்குள் நுழைய முடியாதவாறு காவல் துறை தடைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பதற்றம் அதிகரித்தது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, தடியடி நடத்தியும், தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தியும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைத்தனர். இதில், பல மாணவர்கள் காயம் அடைந்தனர். சுமார் 200 போராட்டக்காரர்கள் அருகிலுள்ள காவல் நிலையங்களில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “BPSC வினாத்தாள் கசிவு மற்றும் மோசடியை மறைக்க பிஹாரின் NDA அரசாங்கத்தால் மிருகத்தனமான லத்திசார்ஜ் மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சர்வாதிகாரத்தின் தடியால் இளைஞர்களின் மன உறுதியைக் குலைக்கும் முயற்சி மிகவும் வெட்கக்கேடானது மற்றும் கண்டிக்கத்தக்கது. வினாத்தாள் கசிவு நெட்வொர்க்கை பாஜகவினர் நாடு முழுவதும் விரித்துள்ளனர். இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் கசிந்துள்ளன. பிபிஎஸ்சி தேர்வில் 3.28 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி உள்ளது. தில்லுமுல்லு கண்டறியப்பட்டால், பாஜக வெட்கமின்றி மறுக்கிறது அல்லது லத்தி சார்ஜ் மூலம் இளைஞர்களை ஒடுக்குகிறது.” என குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிஹாரில் மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். தேர்வில் ஊழல், முறைகேடு, வினாத்தாள் கசிவு ஆகியவற்றை தடுப்பது அரசின் வேலை. ஆனால் ஊழலை நிறுத்துவதற்குப் பதிலாக, மாணவர்கள் குரல் எழுப்ப விடாமல் தடுக்கப்படுகிறார்கள். இந்த கடும் குளிரில் இளைஞர்கள் மீது தண்ணீர் பீரங்கி மற்றும் லத்தி சார்ஜ் செய்வது மனிதாபிமானமற்ற செயல். பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு, இளைஞர்கள் மீதான இரட்டை அட்டூழியங்களின் அடையாளமாக மாறியுள்ளது.” என குற்றம் சாட்டியுள்ளார்.