புதுமைப் பெண் : `ஒரு பெண் கல்வியில் நுழைந்தால் அது சமூகப் புரட்சி..!’ – முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று, தற்போது உயர்கல்வி கற்றுக் கொண்டிருக்கும்  மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், “தமிழகத்தில் ”புதுமைப்பெண்”  திட்டத்தின் கீழ் இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். அத்திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளையும் சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்ட மாணவிகள்

இதனையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என  அறிவிக்கப்பட்டது. அதன்படி, இத்திட்ட விரிவாக்கம் தொடங்கப்பட்டுள்ளது.  ’முத்துகர்’ என்று அழைக்கப்படும்  தூத்துக்குடியில் வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ உ சி சிதம்பரனார் ஆகியோர் பிறந்த மண்.  வீரம்மிக்க பெரும் தலைவர்களுக்குச் சொந்தமான ஊரான  இந்த தூத்துக்குடியில்  இந்த மகத்தான திட்டத்தை தொடங்கி வைப்பது  மகிழ்ச்சி. 

தமிழ்நாட்டுப் பெண்கள் இந்தியாவிலேயே டாப்பாக உள்ளனர். மார்க் வாங்குவதிலும் சரி, உயர்கல்வியில் சேர்வதிலும் சரி, வேலைக்கு செல்வதிலும் சரி. அனைத்திலும் தமிழக பெண்கள் தான் டாப்.  இன்றைக்கு கல்வி நிலையைப் பொறுத்தவரையில் பெண்கள்தான் முதலில் உள்ளனர்.  இந்தியாவில் மருத்துவத்தில் தமிழகம் நம்பர் ஒன் ஆக  உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் சேர்க்கை குறைவாக உள்ளதை அறிந்து புதுமை பெண் திட்டத்தை உருவாக்கினேன்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின்

இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவியர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. மாணவியரின் படிப்பிற்கு என்ன தடை வந்தாலும் அதை உடைப்பேன். இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 75 ஆயிரத்து 28 ஆயிரம்  மாணவியர்கள் பயன் பெறுவார்கள்.  தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு 4,680 மாணவிகள் பயன் அடைகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ரீதியாக, பாலின ரீதியாக கல்விக்கு தடை இருந்தது.  ஆனால், அந்த கல்விக் கனவை அனைவருக்கும் திறந்து விட்ட ஆட்சி நீதிக்கட்சி ஆட்சிதான்.  இந்தியாவிலேயே அனைவருக்கும் கல்வி என சட்டம் இயற்றியது நீதிக்கட்சி.  100 பெண்களில் இருவர் மட்டுமே கல்வி பயின்று இருந்த நிலை இன்று மாறியுள்ளது.  வந்த பாதையை மறக்காமல் இருந்தால்தான் வழித்தவறி போகாமலிருக்க முடியும்.  ஒரு ஆண் கல்வியில் நுழைந்தால், அது  கல்விக்கு வளர்ச்சி. ஆனால்,  ஒரு பெண் நுழைந்தால் அது சமூகப் புரட்சி.

வெள்ள நிவாரண நிதிக்காக சேமிப்பு நிதி வழங்கிய மூதாட்டி புஸ்பம்

இதனால், தமிழ்நாட்டில் உயர் கல்வி பெறாத பெண்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவேன்.  நாட்டில் உயர்கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழகம் தான் டாப். அதே நேரத்தில் மாணவிகள், படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.” என்றார்.  

விழா நிறைவில், தூத்துக்குடியில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் 87 வயதான் புஸ்பம் என்ற மூதாட்டி தான் சேமித்து வைத்திருந்த ரூ.11 ஆயிரத்தை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்காக ரொக்கமாக வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.