புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 19,000 போலீஸார் பாதுகாப்பு; கடலில் இறங்க, பட்டாசு வெடிக்க தடை

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலில் இறங்கவும், பட்டாசுகள் வெடிக்கவும் காவல் ஆணையர் தடை விதித்துள்ளார்.

ஆங்கில புத்தாண்டை (2025) வரவேற்கும் வகையில் நாளை (டிச.31) நள்ளிரவு இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் பொது மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில் ஏராளமானோர் திரள்வார்கள். நள்ளிரவு 12 மணிக்கு ‘ஹேப்பி நியூ இயர்’ என ஒருமித்த குரலில் உற்சாக குரல் எழுப்புவார்கள். மேலும், கேக்குகள் வெட்டப்பட்டு கூட்டத்தினருக்கு வழங்கப்படும். பலர் உற்சாக நடனமாடி புத்தாண்டை வரவேற்பார்கள். பட்டாசுகளும் வெடிக்கப்படும்.

இதையடுத்து, புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாடுவதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். கடற்கரை, வழிபாட்டு தலங்கள், சாலைகள், பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் உள்பட சென்னை முழுவதும் 19 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல் துறையினருக்கு உதவியாக, 1,500 ஊர்க்காவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் ஜிஎஸ்டி சாலை போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (பைக் ரேஸ்) தடுப்பு நடவடிக்கையாக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுதலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிச.31-ம் தேதி முதல் ஜன.1-ம் தேதி வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்களை அப்புறப்படுத்த மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ரோந்து போலீஸார் குதிரைப்படைகள் மற்றும் மணலில் செல்லக்கூடிய ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் மணல் பகுதிகளில் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்திட வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.