விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு `96′ திரைப்படம் வெளியாகியிருந்தது.
`பசங்க’, `சுந்தரபாண்டியன்’ போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் `96′ திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார்.
90ஸ்கிட்ஸ், 2கே கிட்ஸ் என பலருக்கும் இத்திரைப்படம் அப்படியொரு ஃபேவரிட். அதுமட்டுமல்ல, பலருடைய பள்ளிப் பருவ நாஸ்டால்ஜிய பக்கங்களையும் இத்திரைப்படம் புரட்டியது. இத்திரைப்படத்தை சர்வானந்த், சமந்தாவை வைத்து தெலுங்கிலும் ரீமேக் செய்தார் பிரேம் குமார். `96′ திரைப்படத்திற்குப் பிறகு இந்தாண்டு இவர் இயக்கத்தில் `மெய்யழகன்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. உறவுகளின் முக்கியத்துவத்தைப் பேசும் இத்திரைப்படத்தில் மெய்யழகனாக கார்த்தி நடித்திருந்தார். கடந்த சில நாட்களாக `96′ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டு வந்தது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அதே கதாபாத்திரங்களை வைத்து இந்த இரண்டாம் பாகம் நகரவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
தற்போது `96′ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் பிரேம் குமார் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்தியப் பதிப்பின் பேட்டியில் பேசியிருக்கிறார். இது குறித்து அவர், “நான் தற்போது `96′ படத்தின் சீக்குவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். கொச்சியில் தங்கி இரண்டாம் பாகத்திற்கான எழுத்துப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இதை தாண்டி மற்றொரு திரைப்படத்தின் பணிகளிலும் இறங்கியிருக்கிறேன். அத்திரைப்படம் ஒரு சர்வைவல் டிராமா. இந்த இரண்டுப் லைன் அப்பில் என்னுடைய அடுத்த திரைப்படம் `96′ படத்தின் சீக்குவல்தான்!” எனக் கூறியிருக்கிறார்.
Vikatan Play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…