ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று போட்டிக்கு பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணி போராடத் தவறியது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஐந்து போட்டியில் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தற்போது 1-2 என்ற கணக்கில் உள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளது. 340 ரன்கள் இலக்கை எதிர்த்து நான்காவது இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி, வழக்கம்போல பேட்டிங்கில் சொதப்பியது.
நீங்கள் செய்ய வந்ததை உங்களால் செய்ய முடியாமல் போனால் மனதளவில் தொந்தரவு ஏற்படும் என்றும், எனது மோசமான பேட்டிங்கும் தோல்விக்கு காரணம் என்று ரோஹித் செய்தியாளர்களிடம் கூறினார். “இந்த தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. போட்டியை வெல்வதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் அந்த வழிகளைக் கண்டுபிடிப்பதில் நாங்கள் தவறிவிட்டோம். நாங்கள் கடைசி வரை போராட விரும்பினோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. நாங்கள் ஆஸ்திரேலியா அணியின் 6 விக்கெட்களை விரைவாக எடுத்தோம். ஆனாலும் டார்கெட் 340 என்று ஆனது. விஷயங்கள் கடினமாக இருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.
#TeamIndia fought hard
Australia win the match
Scorecard https://t.co/njfhCncRdL#AUSvIND pic.twitter.com/n0W1symPkM
— BCCI (@BCCI) December 30, 2024
ஆனாலும் போதுமான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை. நான்காம் நாள் ஆட்டத்திற்கு பிறகு ஒரு குழுவாக வேறு என்ன செய்திருக்க முடியும் என்று யோசித்தேன். நாங்கள் எங்களிடம் இருந்த அனைத்தையும் பயன்படுத்தினோம், ஆஸ்திரேலியா அணியும் கடினமாக போராடினார்கள், குறிப்பாக கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் போட்டியை மாற்றியது. 340 என்பது எளிதானது இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆரம்பத்தில் விக்கெட்களை இழக்காமல் கடைசியில் அடித்து ஆடலாம் என்று முடிவு எடுத்து இருந்தோம். ஆனால் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக பந்து வீசியது.
முதல் இன்னிங்ஸின் போது நிதிஷ் குமார் ரெட்டி சிறப்பாக விளையாடினார். முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இந்த நிலைமைகள் மிகவும் கடினமாக இருக்கலாம், ஆனால் அவர் சிறந்த தன்மையையும், திடமான நுட்பத்தையும் காட்டினார். மேலும் அவருக்கு அணியிலிருந்தும் அனைத்து ஆதரவும் கிடைத்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா முற்றிலும் புத்திசாலி, நாங்கள் பல ஆண்டுகளாக அவரைப் பார்த்து வருகிறோம். அவர் நாட்டிற்காக விளையாடி அணிக்காக சிறப்பாக செயல்பட விரும்புகிறார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு மறுபக்கத்தில் இருந்து அதிக ஆதரவு கிடைக்கவில்லை” என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.