விஜய்யின் ‘தளபதி 69’ படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் புத்தாண்டில் இப்படம் குறித்த அசத்தலான அப்டேட் ஒன்றும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் விஜய்யின் கட்சி மாநாடு நடந்தது. அந்த மாநாடு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, இன்னொரு பக்கம் எளிமையான முறையில் அவரின் கடைசி படமான ‘தளபதி 69’ படப்பிடிப்பையும் தொடங்கி விட்டார் விஜய். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அஜித்தின் கூட்டணியில் மூன்று படங்களை இயக்கிய வினோத், முதன்முறையாக விஜய்யை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியா மணி, பாலிவுட் நடிகர் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், கௌதம் மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பதாக இருந்தது. ”எனக்கு ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கேட்டிருக்கிறார்கள். என்னுடைய தேதி பிரச்னைகளும் இருக்கிறது. அதனால், அந்த கதாபாத்திரத்தில் உறுதியாக இருப்பேனா என்பது தெரியவில்லை” என்று சொல்லியிருந்தார் அவர்.
டெக்னீஷியன் டீமும் புது டீமுடன் இணைந்துள்ளார் வினோத். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு, அனிருத்தின் இசை, அனல் அரசுவின் ஸ்டன்ட் என புது டீமுடன் கைகோத்துள்ளார் வினோத்.
மாநாட்டிற்கு பிறகு கட்சி வேலைகள் தீவிரமாக இருந்து வருவதால், ‘தளபதி 69’ படத்திற்கு மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளே ஒதுக்கி கொடுத்து நடித்து வருகிறார் விஜய். படப்பிடிப்பை கூட, ஹைதராபாத்தில் வைக்க வேண்டாம் என அவர் சொல்லியிருப்பதால், சென்னையில் பையனூரில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
ரஜினியின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு அங்கே தான் நடந்தது. கலை இயக்குநர் வி.செல்வகுமார் கைவண்ணத்தில் போலீஸ் நிலையம் முதல் தொழிற்சாலை வரை பல்வேறு செட்டுகள் அமைத்து படமாக்கி வருகின்றனர். இதுவரை 40 சதவிகிதம் படப்பிடிப்பு நடந்திருக்கலாம் என்கின்றனர். விஜய்யின் தேதிகள் இல்லாத நாட்களில் இதர நடிகர்களின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
விஜய்யை பொறுத்தவரை முன்பெல்லாம் ஒரு படத்திற்கு தேதிகள் கொடுத்தார் என்றால் அவரது முழுக்கவனமும் படப்பிடிப்பில் தான் இருக்கும். சில சமயங்களில் கேரவனுக்கு கூட செல்லாமல் ஸ்பாட்டில் இருப்பார். ஆனால், இப்போது கட்சி வேலைகள் அதிகரித்துள்ளதால், கட்சிக்காகவும் கவனம் செலுத்தி வருகிறார். வரும் புத்தாண்டு அன்று, படத்தின் டைட்டில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. அது பாடல் காட்சி ஆக இருக்கலாம் என்கின்றனர். ஜனவரி மாத இறுதியில் கட்சிக்கான பணி ஒன்றின் முக்கிய அறிவிப்பும் வெளிவரலாம். வரும் ஏப்ரல், மாதத்தோடு முழுப்படப்பிடிப்பும் நிறைவடையலாம் என்றும் சொல்கின்றனர் .