அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம்

சென்னை: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு 21 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு மாஸ்க் அணிந்து நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 110 மாத அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை கைவிட வேண்டும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு 21 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்க வேண்டும்.

மேலும் 2003-ம் ஆண்டு முதல் பணி நியமனம் பெற்ற தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும், பணிக்காலத்தில் மறைந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.30, 31 ஆகிய தேதிகளில் தமிழக அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு போராட்டம் அறிவித்திருந்தது.

அதன்படி, கருப்பு மாஸ்க் அணிந்து ஓய்வூதியர்கள் சென்னை பல்லவன் இல்லம் முன்பு நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேசிய தலைவர்கள், “முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 100 நாட்களில் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்றார். ஆயிரம் நாட்களை கடந்தும் ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை. எனவே, இந்த போராட்டத்தை நடத்துகிறோம்” என்றனர்.

ஆர்பாட்டத்துக்கு சென்னை கிளைத் தலைவர் டி.குருசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஏ.வரதராஜன், துணைப் பொதுச் செயலாளர் வீரராகவன், மாநிலச் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.