சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (70). இவர், சென்னை மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்தவர், கடந்த 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்குச் சாமி கும்பிட பார்த்தசாரதி திட்டமிட்டார். இதற்காக அவர் கடந்த 21.12.24-ம் தேதி வில்லிவாக்கத்திலிருந்து பேருந்து மூலம் தி.நகருக்கு வந்தார். பின்னர் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், வீடு திரும்ப தி.நகர் பேருந்து நிலையத்தில் பிற்பகல் 12.30 மணியளவில் காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், தங்களை போலீஸ் எனப் பார்த்தசாரதியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு அவர்கள், உங்கள் மீது கடத்தல் புகார் வந்திருக்கிறது. அதனால் உங்களிடம் விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதனால் அதிர்ச்சியடைந்த பார்த்தசாரதி, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத அந்த இரண்டு மர்ம நபர்கள், பார்த்தசாரதி கையில் வைத்திருந்த பையைச் சோதனை செய்தனர்.

பின்னர் அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியைக் கழற்றிக் கொடுக்கும்படி அந்த மர்ம நபர்கள் பார்த்தசாரதியை மிரட்டினர். அதனால் பயந்து போன பார்த்தசாரதி, சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தார். பின்னர் காவல் நிலையத்துக்கு வந்து சங்கிலியைப் பெற்றுக் கொள்ளும்படி கூறி விட்டு, அந்த நபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து தி.நகர் காவல் நிலையத்துக்குப் பார்த்தசாரதி சென்று விவரத்தைக் கூறி சங்கிலியைத் தரும்படி கேட்டார். உடனே அங்கிருந்த போலீஸார், நாங்கள் யாரும் உங்களிடம் சங்கிலியை வாங்கவில்லை என்று தெரிவித்தனர். அதன்பிறகே பார்த்தசாரதி, ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவரிடம் போலீஸ் எனக் கூறி சங்கிலியைப் பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் சி.சி.டி.வி கேமரா பதிவு காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/PorattangalinKathai