மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையிலான உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது.
இந்த வகை ரயில்களுக்கு மேம்படுத்தப்பட்ட ‘சிஆா்450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயிலானது நவீன தொழில்நுட்பங்களுடன் மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும் என சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது. இந்த வகை ரயிலானது, சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணித்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிஆர்-450 புல்லட் ரயிலானது அதிவேகத்தில் பயணிப்பதால் ரயில் துறையில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளோம்.
வேகம், எரிசக்தி பயன்பாடு, உள் இரைச்சல் குறைப்பு, பிரேக் செயல்பாடு உள்ளிட்டவற்றில் உலக அளவில் புதிய தரநிலைகளை இந்த ரயில் ஏற்படுத்தி சாதனை புரிந்துள்ளது. சீனாவில் தற்போது மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக சிஆர்400 புல்லட் ரயில் இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த ரயிலானது மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து சாதனை புரிந்துள்ளது. தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கும் ரயிலானது பல்வேறு சோதனை நிலைகளுக்கு உள்ளாக்கப்படவுள்ளது. அதன் பின்னரே இது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
சீன நாட்டிலுள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 47,000 கிலோமீட்டர் தூரத்துக்கு அதிவேக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெய்ஜிங் – ஷாங்காய் வழித்தடம் வழியே இயக்கப்படும் ரயில்கள் மிகவும் லாபகரமாக இயங்கி வருகின்றன.
பிற வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் பெரிய அளவில் லாபம் இல்லை என்றபோதும், அதிவேக ரயில் சேவைகள் மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சி மேம்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் அதிவேக ரயில்களை சீனா ஏற்றுமதி செய்துள்ளது. விரைவில் சிஆர்450 புல்லட் ரயில்கள் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொலைவில் இருக்கும் முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் வேறொரு நகரத்துக்கு பாதுகாப்பாகவும், சொகுசாகவும், விரைவாகவும் பயணிக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.