2025-ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பணியாளர்களிடம் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவுறுத்தியுள்ளார்.
நடப்பாண்டில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாட்டு வியூகம் குறித்தான ஆலோசனைக் கூட்டம் அதன தலைவர் சுந்தர் பிச்சை தலைமையில் கலிபோர்னியாவில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது: இந்த தருணத்தின் அவசரத்தை உணர்ந்து அனைத்தையும் உள்வாங்கி நிறுவனத்தை வேகமாக நடத்தி செல்ல வேண்டியது பணியாளர்களின் கடமை. நிறுவனத்தின் வளர்ச்சியில் அவர்களுக்கு அதிக பங்கு உள்ளது.
2025-ல் ஏஐ தொழில்நுட்பத்தின் நன்மைகளை கண்டறிந்து வெளிப்படுத்துவதிலும், பயனர் சிக்கல்களை தீர்ப்பதிலும் நாம் இடைவிடாமல் கவனம் செலுத்த வேண்டும். ஜெமினி ஆப் மூலமாக ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை துரிதமான முறையில் பரவலாக்க வேண்டும் என்பதே இந்த புத்தாண்டில் கூகுள் நிறுவனத்தின் முதன்மையான இலக்கு.
கடந்த சில மாதங்களாக பயனர்களிடையே ஜெமினி ஆப்-க்கு வரவேற்பு மிகவும் அதிகரித்துள்ளது. இருப்பினும், 2025-ல் இடைவெளியை சரி செய்வதற்கும், முதலிடத்தை தக்க வைப்பதற்கும் சில வேலைகளை நாம் செய்து முடிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ஜெமினியை 500 மில்லியன் பயனர்கள் கொண்ட நுகர்வோர் தளமாக மாற்றுவது கூகுளின் மிக லட்சிய இலக்குகளில் ஒன்று. வரலாற்றில் எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நீங்கள் நன்றாக செயல்பட்டு முதல் தரமான பொருளை உருவாக்க வேண்டும். அது, 2025-ல் நிறைவேறும் என்று நம்புகிறேன். இவ்வாறு சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.