ஒரு குட்டி தீவு தேசத்தில் கிரிமினல்களின் அட்டூழியத்தால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நம் ஊரில் சினிமா கதைக் களமாக இருக்கும் ’கேங் ஊர்’ ஒரு நாட்டையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
தென் அமெரிக்கக் கண்டத்தில் இரு தீவுகளைக் கொண்ட நாடு டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு. இத்தீவுகளில் ஆரம்பத்தில், அமெரிக்கப் பழங்குடியினர் வசித்தனர். ஐரோப்பியர்களின் ஆதிக்கத்துக்குள் இந்த நாடு வந்தபோது, இங்கு வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க, சீன, போர்த்துக்கீசிய, இந்திய நாடுகளில் இருந்து மக்கள் கொண்டுவரப்பட்டனர்.
1820-களில் இந்தியர்களை ஏமாற்றி வெளிநாட்டு வேலைகளுக்கு அழைத்துச் செல்வது பெரும் தொழிலாக இருந்தது. மக்களும் பிழைப்புக்காக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற தவிப்பில் இருந்தனர். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகள், மற்றும் கங்கைச் சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றனர். இந்தியர்களை அடிமைத் தொழிலாளர்களாக விற்பனை செய்யும் தொழிலை பிரான்ஸும் இங்கிலாந்தும் போட்டி போட்டுச் செய்தன. மொரீஷியஸ் உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இவ்வாறு இந்தியர்கள் விற்கப்பட்டனர்.
தற்போது பல்வேறு நாடுகளிலிருந்து அடிமைத் தொழிலாளர்களாக வந்தவர்களின் வம்சாவளியினர் தான் அங்கு பெரும்பான்மையாக உள்ளனர்.
இந்நிலையில் சமீப காலமாக அந்நாட்டில் கிரிமினல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. அன்றாடம் பெருகிவரும் கேங் வார் சம்பவங்களால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அந்நாட்டுப் பிரதமர் கேத் ரொவ்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கிரிமினல் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோ காவல்துறை அளித்த அறிவுரையின் பேரில் பொது அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு காவல்துறையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வாரண்ட் இல்லாமல் கூட கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்வர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அட்டர்னி ஜெனரல் ஸ்டூவர்ட் யங் வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் மாதத்தில் மட்டும் நாட்டில் 61 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆண்டு முழுவதும் 623 கொலைகள் நடந்துள்ளது. இது 2022-ல் 599 ஆகவும், 2023-ல் 577 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.