ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனிதாபிமானத்தால் குடிசை வீட்டில் வாழ்ந்த தொழிலாளியின் குடும்பத்தினர் கான்கிரீட் வீட்டில் குடியேற உள்ளனர்.
ஆந்திர அரசு சார்பில் மூத்த குடிமக்கள், கணவரை இழந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு ஓய்வூதியம், நிதியுதவி வழங்கப்படுகிறது. ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கடந்த ஜூலை 1-ம் தேதி ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், பெனுமாகு கிராமத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்றார். அங்கு குடிசை வீட்டில் வசித்த தொழிலாளி பானாவத் நாயக், அவரது மனைவி சீதம்மாவை முதல்வர் சந்தித்து பேசினார்.
சொந்த வீடு இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்படுவதாக பானாவத் நாயக், முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கண்ணீர்மல்க கூறினார். இதை கேட்டு மனம் உடைந்த முதல்வர், தொழிலாளியின் குடும்பத்தினருக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு இரண்டு படுக்கை அறைகள் கொண்ட கான்கிரீட் வீடு கட்டப்பட்டது. இந்த வீடு தொழிலாளி பானாவத் நாயக் குடும்பத்தினர் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது “வாழ்நாள் முழுவதும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மறக்க மாட்டோம். அவருக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். எங்களின் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தை மாதத்தில் புதிய வீட்டில் குடியேறுவோம்” என்று தெரிவித்தனர்.