கும்பகோணம் மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் மேயராகவும், தி.மு.க-வைச் சேர்ந்த சு.ப.தமிழழகன் துணை மேயராகவும் இருக்கின்றனர். மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் 50 தீர்மானங்களை நிறைவேற்றி மேயர் சரவணன் கையெழுத்திட்டுள்ளார். அதன் கோப்புகளை பார்க்க வேண்டும் என திமுக கவுன்சிலர், மாநகராட்சி பொதுக்குழு உறுப்பினர் குட்டி.தெட்சிணாமூர்த்தி கேள்வி எழுப்பினார். இதையடுத்து மேயர் சரவணன், கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கூறி விட்டு எழுந்து தன் அறைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
அப்போது குட்டி.தெட்சிணாமூர்த்தி, மேயர் அறைக்கு முன் உட்கார்ந்து கொண்டு கோப்புகளை காட்டாமல் உள்ளே செல்ல விட மாட்டோம் என்றுள்ளார். ஆனாலும் மேயர் சரவணன், குட்டி.தெட்சிணாமூர்த்தி மீது ஏறி உள்ளே சென்றார். அப்போது `மேயர் என்னை கொல்லப் பார்க்கிறார், எனக்கு நெஞ்சு வலிக்குது’ என்று தெட்சிணாமூர்த்தி கத்தினார். அங்கிருந்த துணை மேயர், `நான் எழுந்திருக்க சொல்கிறேன்’ என மேயரிடம் சொன்னார். ஆனால் அதை கேட்காத மேயர், தானும் கீழே விழுந்து `என்னை காப்பாத்துங்க, என்னை அடிக்க வருகிறார், கேட்க ஆள் இல்லை, என்னை காப்பாத்துங்க, என்னை கொல்ல வருகிறார்’ என தரையில் விழுந்து உருண்டு புரண்டு கத்தினார்.
அப்போது தெட்சிணாமூர்த்தி, `என்னை கீழே தள்ளி விட்டார் எனக்கும் நெஞ்சு வலிக்குது… டாக்டரை வரச் சொல்லி மேயரை செக்கப் செய்திடலாம்’ என்றார். அங்கிருந்த மற்ற கவுன்சிலர்கள், `இரண்டு பேரும் பிரமாதமாக நடிக்கிறாங்க’ என பேசிக்கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இரவு மேயர் சரவணன் கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும், தெட்சிணாமூர்த்தி தனியார் மருத்துவமனையிலும் நெஞ்சு வலிப்பதாக கூறி சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.
இது குறித்து சிலரிடம் பேசினோம். “இந்த களேபரங்கள் முடிந்த பிறகு சரவணன், தி.மு.க எம்.பி-யும், மாவட்டச் செயலாளருமான கல்யாணசுந்தரத்தை சந்தித்தார். அப்போது அவர், `தெட்சிணாமூத்தியும், நீயும் செய்தது தவறு. மேயர் அங்கியை அணிந்து கொண்டு தரையில் உருண்டு மேயருக்கான மாண்பை கெடுத்து விட்டாய், நீ நடிக்குறது அப்பட்டமா தெரியுது, இந்த விவகாரம் தலைமையின் கவனத்துக்கு சென்றுள்ளது. என்ன முடிவெடுக்கிறார்கள்னு பார்ப்போம்’ என சரவணனை திருப்பி அனுப்பி விட்டாராம்.
இந்த நிலையில், தான் சரவணன், கும்பகோணம் அரசு மருத்துமனையில் நெஞ்சு வலிப்பதாகக் கூறி அட்மிட் ஆனார். இதையடுத்து குட்டி.தெட்சிணாமூர்த்தியும் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். டீசன்ட்டான அரசியல் செய்யக்கூடியவர் என பெயரெடுத்த துணை மேயர் சு.ப.தமிழழகன், இந்தச் சம்பவங்களால் சங்கடத்துக்கு ஆளாகி வருகிறார். `மேயர் சரவணன், திமுக கவுன்சிலர்கள் எல்லோரும் சேர்ந்து என்னை கார்னர் செய்கின்றனர். மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்’ என்கிறார்.
`மேயர் கையெழுத்து போட்ட கோப்புகளை காட்ட வேண்டும் என்று கேட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது, இதற்கு கூட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜனநாயக மாண்பை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டார். அதனால் அவர் அறை முன்பு உட்கார்ந்திருந்த என்னை நெஞ்சில் குத்தினார். காலால் மிதித்தார்’ என்கிறார் தெட்சிணாமூர்த்தி. இரண்டு தரப்பும், கல்யாணசுந்தரத்தை சந்தித்து பேசியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் லோகநாதன், இது குறித்து எதுவும் பேசாமல் அமைதி காக்கிறார். இரு கட்சி தலைமையும் கலந்து பேசி கும்பகோணம் மாநகராட்சியில் நடக்கும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றனர்.