பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் 2004 முதல் 2014 வரை பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் இறுதியாக ஜனவரி 3, 2014-ல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பிரதமராக பதவி வகித்தபோது சிறந்த தருணம் எது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மன்மோகன் கூறிய பதில்: இதைப்பற்றி சிந்திக்க எனக்கு நேரம் தேவைப்படும். ஆனால், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தின் செயல்முறைகளை தடுக்க முயன்ற அணுசக்தி ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை செய்து கொண்டதுதான் என்னைப் பொருத்தவரையில் சிறந்த தருணம். இது, பல வழிகளில் நமது நாட்டின் தொழில்நுட்பத்தை முன்னேற்றம் காணச் செய்யும்” என்றார்.
இதேபோன்று மிகப்பெரிய வருத்தம் குறித்த கேள்விக்கு மன்மோகன் சிங் பதிலளிக்கையில், “மன்னிக்கவும். இந்த விஷயத்தை நான் சிந்திக்கவில்லை. ஆனால், நிச்சயமாக சுகாதாரத் துறையில் நிறைய செய்ய வேண்டும் என நினைத்தும் அதை செய்ய முடியவில்லை.
இது எனக்கு மிகப்பெரிய வருத்தம். பெண்கள், குழந்தைகளுக்கான சுகாதாரத்தில் நிறைய செய்ய விரும்புகிறேன். நாங்கள் தொடங்கிய தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் நிறைய சாதித்துள்ளது.
இருப்பினும், அந்த துறையில் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது” என்றார். ஊழலை கட்டுப்படுத்த தவறியதாக தம்மீது உள்ள குற்றச்சாட்டு மன்மோகன் சிங் புன்னகையுடன் கூறுகையில், ‘‘சமகால ஊடகம், எதிர்க்கட்சிகளை விடவும் வரலாறு எனக்கு அன்பாக இருக்கும் என்று நேர்மையாக நம்புகிறேன்.
அரசாங்கத்தின் அமைச்சரவை அமைப்பு முறையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் என்னால் வெளியிட முடியாது. சூழ்நிலை மற்றும் கூட்டணி ஆட்சியின் நிர்பந்தங்களை தாண்டி என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளேன்” என்றார்.