குட்டி அந்தமான் என்று அழைக்கப்படும் ஹட் பே தீவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பலராமன், லட்சுமி தம்பதி. இவர்களை கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ல் சுனாமி தாக்கிய போது அருகில் உள்ள குன்றின் மீது ஏறி உயிர்தப்பினர். அப்போது, லட்சுமி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். தனது கிராமம் அழிவதை கண் முன்னால் கண்ட லட்சுமி சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் வாடியிருந்த நான்கு நாட்களுக்குப் பிறகு அவரை காப்பாற்ற ஏஞ்சல் போல ஐஎன்எஸ் கரியல் போர்க்கப்பல் வந்தது. அந்த கப்பலில் ஏறிய பிறகு லட்சுமிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து, போர்ட் பிளேர் செல்வதற்கு முன்பாகவே அவரு்க்கு பிரசவம் பார்க்க வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டது. கொஞ்சமும் முன் அனுபவம் இல்லாத கப்பலில் இருந்த மருத்துவர் மற்றும் அவரது உதவியாள லட்சுமிக்கு பிரசவம் பார்த்தனர். டிசம்பர் 29, 2004 மாலை 7 மணிக்கு லட்சுமிக்கு அழகான குளோரி என்ற பெண் குழந்தை பிறந்தது. போர்க் கப்பலில் பிறந்த முதல் குழந்தை இது.
இப்போது குளோரிக்கு 20 வயது ஆகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், “ இந்திய கடற்படை போர்க்கப்பலின் உதவியால் பிறப்பெடுத்தேன். தற்போதும் அவர்களின் உதவியால்தான் படித்து வருகிறேன். ஜேஎன்ஆர்எம் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்ற பிறகு இந்திய கடற்படையில் அதிகாரியாக சேர வேண்டும் என்பதே எனது ஆசை. அப்போதுதான் நான் பிறந்த கடனை திரும்ப செலுத்த முடியும். அதற்கு ஏதுவாக இப்போதே எஸ்எஸ்பி தேர்வுக்கு தயாராகி வருகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.