தமிழகத்தில் பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 2024-ல் 1,179 மிமீ மழை பதிவானது. முந்தைய ஆண்டைவிட இது 143 மி.மீ. அதிகம். தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 10 சதவீதமும், வடகிழக்குப் பருவமழை காலத்தில் 27 சதவீதம் அதிக மழை பதிவானது. தென்மேற்கு பருவக் காலத்தில் செப்டம்பர் மாதத்தை தவிர, இதர மாதங்களில் அதிகளவு மழை பதிவாகியிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் இயல்பைவிட 64 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் 590 மி.மீ. பதிவாகியிருக்கிறது. டிச .11 முதல் 14-ம் தேதி வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக பெரும்பாலான இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பைவிட நெல்லை மாவட்டத்தில் 265 சதவீதம் அதிகமாக பதிவாகியிருக்கிறது.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் நெல்லை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டங்களில் இயல்பைவிட மிக அதிக மழை பெய்துள்ளது.
வரும் நாட்களில் கிழக்குப் பகுதி அலைகளின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கும். அதன்படி, பொங்கல் வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. பொதுவாக, மிதமான மழை, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல், இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டிச. 31-ம் தேதி (நேற்று) காலை வரையிலான 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மிக தீவிரமாக இருந்தது. திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பதிவானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.