சென்னை: “தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்!” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு முத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, மக்கள் எவ்வித அச்சமுமின்றி நிம்மதியுடன் வாழ்ந்து வந்ததை, இந்த நேரத்தில் பெருமிதத்தோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் அமைப்போம்! என இந்நாளில் சபதமேற்போம்.
மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு, புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று, எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.