“திமுக ஆட்சியில் அனைத்துக்கும் சிபிஐ விசாரணை கேட்கும் நிலை' – ஆர்.பி.உதயகுமார்

“ஸ்டாலின் அரசின் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். கள்ளச்சாராய சாவு, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் கொடுமைகள் அனைத்துக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது..” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

ஆர்.பி உதயகுமார்

பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள்ளிக்குடியில் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததால் அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர். பிறகு காவல்துறையை கண்டித்து சாலை மறியல் செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு ஆர்.பி.உதயகுமார் உட்பட ஏராளமான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை, தற்போதைய திமுக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. தமிழகம் முழுவதும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை திமுக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் அதிமுக தொடர்ந்து போராடும்.

  தமிழகத்தில் நடக்கின்ற சம்பவங்களை பார்த்து ஸ்டாலின் அரசு கோமா நிலையில் உள்ளது என்று சொல்லலாமா? அலட்சியமாக உள்ளது என்று சொல்லலாமா?  மகளிரின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற தார்மீக கடமையில் அரசு தவறி இருக்கிறது. இதனால் அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பெண்கள் பாதுகாப்புதான் ஒரு நாட்டின் கலாசாரம், நாகரிகம், பாதுகாப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

ஆர்.பி.உதயகுமார்

கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதோடு அச்சத்தையும் மக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவிலேயே தலைசிறந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே செல்வதற்கு காவல்துறையே அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை இருக்கும்போது, குற்ற பதிவேட்டில் உள்ள குற்றவாளி சர்வ சாதாரணமாக அங்கு நடமாடி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்பதைத்தான் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து சொல்லி வருகிறார், அதற்கு அத்தாட்சியாக பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அரசன் முறையாக ஆண்டால் இறைவனுக்கு சமமாக மக்களால் போற்றப்படுவார்கள். ஆனால், பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்று கூறுவார்கள், இதைப் போலத்தான் இன்று திமுக அரசு உள்ளது

புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகி பாரதிராஜா அரசு மருத்துவமனை செவிலியரை ஆபாச வீடியோ எடுத்து அவரது கணவரிடம் 10 லட்சம் கேட்டு மிரட்ட, புகார் கொடுத்து 13 நாட்கள் ஆகியும் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யவில்லை, இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செவிலியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் குன்றிய மாணவியை 10-க்கும் மேற்பட்டோர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியது குறித்து புகார் கொடுத்தும் வழக்கம் போல காவல்துறை அலட்சியத்துடன் நடந்து அவரின் பெற்றோரை மிரட்டிய செய்தியை நாளிதழில் பார்த்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக விசாரணைக்கு எடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், ஸ்டாலின் அரசோ சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிப்பதுபோல் மூத்த வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.

ஆர்.பி உதயகுமார் ஆர்பாட்டம்

பொதுவாக பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை விதி என உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் தமிழக காவல்துறை மெத்தனமாக கையாண்டிருப்பதை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்து இருக்கிறது. மன உளைச்சலுக்கு யார் பொறுப்பேற்பது? என்று உயர் நீதிமன்றம் இந்த அரசை கேள்வி கேட்டிருக்கிறது? தொழில்நுட்பம் காரணமாக தகவல் கசிந்து விட்டது என்ற காவல்துறையின் வாதத்தை தொடர்ந்து எப்ஜஆர் பதிவிறக்கம் செய்தவர்களை கண்டறிய தொழில்நுட்பம் இருந்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

தங்களது கண்ணியம் குறைந்து விடும் என்கிற அச்சத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வெளியே சொல்வதில்லை. அதையும் தாண்டி புகார் அளித்தாலும் நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமும், அலைக்கழிப்பும், பாதிக்கப்பட்டவர்களை கூடுதல் பாதிப்புக்கு ஆளாக்குகின்றன. இப்படி ஒரு சூழலில் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் பொதுவெளியிலே பகிரப்பட்டுவதால், புகார்அளிக்க முன்வரும் பெண்களை அச்சுறுத்தி முடக்கும் செயலாக பார்க்க வேண்டியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியை குற்றவாளியாக்கும் நோக்கில், அவரின் நடத்தையும், கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கும் நிலைமையை பார்க்கிறபோது கவலையாக இருக்கிறது, என்று திமுக அரசின் நிலை குறித்து உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துஉள்ளது.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதையும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவ மரணத்தையும் நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. இதுபோன்ற சம்பவங்களில் ஸ்டாலின் அரசை மக்கள் நம்பவில்லை. அனைத்து பிரச்னைக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கும் நிலை உருவாகிவிட்டதன் மூலம் திமுக அரசின் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.