தீவிரவாத செயல் பற்றி திட்டமிடுவதும் தீவிரவாதமே: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு தீவிரவாத செயலை பல ஆண்டுகளாக திட்டமிட்டு, அதை செயல்படுத்தாமல் இருந்தாலும் அது தீவிரவாதமே என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டதற்கு எதிராக அல்-காய்தா உறுப்பினர் ஒருவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் பிரதிபா எம். சிங், அமித் சர்மா ஆகியோரை கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பில், “சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் பிரிவு 15-ன்படி தீவிரவாத செயல் என்பதற்காக வரையறை, தீவிரவாத செயலுக்கான விருப்பதை வெளிப்படுத்துவதையும் உள்ளடக்கியது ஆகும். அத்தகைய வெளிப்பாடு ஒரு உடனடி தீவிரவாத செயலுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. இது பல ஆண்டுகளாக சிந்திக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருக்கும் மற்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகு செயல்பாட்டுக்கு வரும் திட்டங்களுக்கும் பொருந்தும். தீவிரவாத தாக்குதலை செயல்படுத்துவதற்கான திட்டமிடல் பல ஆண்டுகளாக நீடிக்கலாம். ஒரு குறிப்பிட்ட தீவிரவாத செயல் அடையாளம் காணப்படாவிட்டாலும் கூட, தீவிரவாத செயல்களுக்கு தயாராகி வருவதையும் உபா சட்டத்தின் 18-வது பிரிவு குற்றமாக கருதுகிறது” என்று கூறியுள்ளது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில், “ஆயுதப் பயிற்சிக்காக பலர் பாகிஸ்தான் சென்றதற்கு மனுதாரர் காரணமாக இருந்துள்ளார். அவரது பாகிஸ்தான் பயணத்தில், மும்பை தாக்குதல் வழக்கில் தேடப்படும் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் மற்றும் ஜமாத் உத்தவா தலைவரை சந்தித்துள்ளார். கடந்த 2015-ல் இவர் பெங்களூரு சென்று தண்டனைக் கைதி ஒருவரை சந்தித்துள்ளார். அப்போது தங்கள் அமைப்பின் திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். அவர் தனது உரையில் நாட்டுக்கு எதிராகவும் புனிதப் போர் தொடர்பாகவும் ஆத்திரமூட்டும் வகையில் பேசியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில் “அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் பேச்சுக்கள், நாட்டுக்கு எதிராக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்துவதற்காக அவர்களை வேலைக்கு சேர்க்கும் முயற்சிகள் ஆகியவற்றை தீவிரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்ற அடிப்படையில் முற்றிலும் கைகழவ முடியாது” என்றும் கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.