பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான விசாரணையை முடித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் நேற்று டெல்லி புறப்பட்டனர். விசாரணை அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதன்தொடர்ச்சியாக ஆணைய உறுப்பினர்கள் மம்தா குமாரி, பிரவீன் தீட்ஷித் ஆகியோர் நேற்று முன்தினம் அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணையை தொடங்கினர். பதிவாளர் ஜெ.பிரகாஷ் மற்றும் டீன்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்களுடன் ஆய்வு நடத்தினர். இதைத்தொடர்ந்து, மாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆலோசனை செய்தனர். அதன்பிறகு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோரை சந்தித்தனர்.
இந்நிலையில், விசாரணையை முடித்துக்கொண்டு நேற்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். முன்னதாக விமான நிலையத்தில் மம்தா குமாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் அண்ணா பல்கலைகழக வளாகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டோம். பாதிக்கப்பட்ட மாணவியையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தோம். மேலும், தமிழக ஆளுநரையும் சந்தித்து பேசினோம். விசாரணை தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும்.
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒருவரை தமிழக காவல் துறையினர் எப்படி வெளியில் நடமாடவிட்டனர். தமிழக அரசும், காவல்துறையும் ஏன் அவர் மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை, பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.