மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3வது முறையாக இன்று இரவு 10 மணிக்கு நிரம்பியது. ஒரே ஆண்டில் 3 முறை மேட்டூர் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரை கொண்டு சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 12-ம் தேதியில் இருந்து ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் குறுவை, சம்பா மற்று தாளடி பயிர்களுக்கு 330 டிஎம்சி நீர் தேவைப்படும். அதேபோல், அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை கொண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்
கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியது. பின்னர், அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதையடுத்து, காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த ஜூலை 30-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை 43வது முறையாக எட்டியது. பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்தது. பின்னர், நீர்வரத்து அதிகரித்ததால், நடப்பாண்டில் ஆகஸ்ட் 12-ம் தேதி 2வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் 120 அடியை எட்டியது. பின்னர், மழை குறைந்ததாலும், பாசனத்துக்கு நீர் திறப்பின் காரணமாகவும் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைய தொடங்கியது.
டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக பாசனத்துக்கு நீர் தேவை குறைந்ததால், நீர் திறப்பும் குறைக்கப்பட்டது. பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 2,331 கன அடியாக இருந்த நிலையில் இன்று 2,875 கன அடியாக அதிகரித்து. நடப்பாண்டில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை 3வது முறையாக இன்று இரவு 10 மணிக்கு மேட்டூர் அணை 3வது முறையாக நடப்பாண்டில் நிரம்பியுள்ளது. ஒரே ஆண்டில் 3 முறை அணை நிரம்பியதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ள நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதமும், கால்வாய் பாசனத்திற்காக 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு: இந்நிலையில், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார், இன்று அணையில் ஆய்வு மேற்கொண்டார். அணையின் 16 கண் மதகு பகுதி, இடது கரை, வலது கரை, வெள்ள கட்டுப்பாட்டு மையம், சுரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அணையில் இருந்து நீரை வெளியேற்றுவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், நீர்வளத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின் போது, சேலம் மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன், அணை பிரிவு உதவி பொறியாளர் சதிஷ் ஆகியோர் உடனிருந்தனர்.