புதுச்சேரி: புத்தாண்டையொட்டி புதுச்சேரி கடலில் இறங்குவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலோரத்தில் காற்று பலமாக வீசுவதால் அலைகள் சீற்றமும் அதிகரித்துள்ளது.
புதுவையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு புத்தாண்டை ஒட்டியும், அரையாண்டு தேர்வு விடுமுறையாலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
கடற்கரையில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்கும் விதமாக கடற்கரையோரம் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. புதுவை கடற்கரை சாலையிலிருந்து பாண்டி மெரினா வரை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் கால்நனைக்கக்கூட சுற்றுலா பயணிகள் இறங்குவதை போலீஸார் தடுத்து எச்சரித்து வருகின்றனர்.
புதுவை கடல் வழக்கத்தைவிட இன்று சீற்றத்துடன் காணப்பட்டது. கடலோரத்தில் காற்று பலமாக வீசுவதால் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது. புதுவை கடலோர காவல்படை போலீஸார் கடலில் படகில் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உப்பளம் துறைமுகத்திலிருந்து டிஜிபி ஷாலினி சிங், ஐஜி அஜித்குமார் சிங்கலா, டிஐஜி சத்திய்சந்தரம், எஸ்எஸ்பி கலைவாணன் ஆகியோர் கடலோர பாதுகாப்பு படையின் 2 படகுகளில் கடலுக்குள் சென்று ஆய்வு செய்தனர்.
கடற்கரையோரம் நீண்டதொலைவு சென்று பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
விடுதிகள் நிரம்பின- நகரெங்கும் போக்குவரத்து நெரிசல் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகையால் விடுதி அறைகள் நிரம்பி உள்ளன. நகரெங்கும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. பல சிக்னல்களைக் கடக்க நெடுநேரம் காத்திருக்கவேண்டிய சூழல் உள்ளது.
ஹோட்டல்கள், உணவகங்களில் கடும் கூட்டம் அலைமோதுகிறது. காத்திருந்துதான் உணவு சாப்பிட வேண்டிய நிலையுள்ளது. தெருவோர உணவகங்களிலும் அதிகளவு மக்கள் சாப்பிட காத்துநிற்பதை காணமுடிகிறது. அதேபோல் நகரப்பகுதியில் ஒயிட் டவுன் பகுதியில் கடற்கரை நோக்கி செல்லும் சாலைகளில் வாகனங்கள் செல்வதை தடுக்க தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன.
புத்தாண்டையொட்டி நட்சத்திர ஹோட்டல்கள், மதுபார்கள், கடற்கரை பகுதிகள் என பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் மதுபான பார்கள், சிறப்பு நிகழ்வுகளில் வரும் 31ம் தேதி இரவு 1 மணி வரை இயக்க கலால்துறை அனுமதி தந்துள்ளது. முதல்முறையாக இரவு 1 மணி வரை இம்முறை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் புதிய மதுபானங்களையும் அறிமுகம் செய்துள்ளனர்.