India National Cricket Team, IND vs ENG: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் வரும் ஜனவரி 8ஆம் தேதியோடு நிறைவடைகிறது. அதன் பின் பிப்ரவரி 19ஆம் தேதி 50 ஓவர்கள் ஃபார்மட்டில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குகிறது.
இதற்கிடையில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் ஐந்து டி20 போட்டிகளில் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோத உள்ளன. இதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் இங்கிலாந்து அணி, சமீபத்தில் அதன் டி20 மற்றும் ஓடிஐ ஸ்குவாடை அறிவித்திருந்தது.
அதிகம் கவனம் பெறும் ஓடிஐ தொடர்
ஜனவரி 22, 25, 28, 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் முறையே கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே மும்பை ஆகிய நகரங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதனை தொடர்ந்து, பிப்ரவரி 6, 9, 12 ஆகிய நாட்களில் முறையே நாக்பூர், கட்டாக், அகமதாபாத் ஆகிய நகரங்களில் 3 ஒருநாள் போட்டிகளும் நடைபெற இருக்கின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஒருபுறம் இருக்க, ஒருநாள் தொடர் மீதுதான் பலரின் கவனமும் இருக்கிறது. கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. அதற்குப்பின் இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடவே இல்லை.
ஓடிஐயில் ஓப்பனிங் யார் யார்?
சுமார் 5-6 மாதங்களுக்குப் பிறகு வரும் பிப்ரவரியில் தான் இங்கிலாந்துடன் இந்த தொடரில் விளையாட இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னர் இந்திய அணிக்கு இந்த மூன்று ஒருநாள் போட்டிகள் மட்டுமே ஒரு பயிற்சியாக இருக்கும் எனலாம். அப்படி இருக்க சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வு செய்யப்படும் வீரர்களே இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பெரும்பாலும் இடம்பெறுவார்கள். ஒரு சில வீரர்களுக்கு இங்கிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு அவர்கள் நேரடியாக சாம்பியன்ஸ் டிராபியில் களம் இறக்கப்படலாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அனைத்து போட்டிகளையும் துபாய் நகரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. எனவே அதற்கு தகுந்த வீரர்களை வைத்தே இந்திய அணி தனது ஸ்குவாடை கட்டமைக்கும். அப்படி இருக்க ஜெய்ஸ்வால் பிரதான ஒருநாள் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியை போன்றே ரோஹித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் ஓப்பனிங்கில் களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம். இவர்களுக்கு பேக்கப் ஆக ருத்ராஜ் கெய்க்வாட், சுப்மான் கில் ஆகியோரில் ஒருவர் இடம்பெறுவார்கள்.
யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?
தொடர்ந்து விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரியான் பராக், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்டோரும் நிச்சயம் இடம்பெறுவார்கள். அதே நேரத்தில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் கலக்கி வரும் நிதிஷ்குமார் ரெட்டியும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்துவீச்சாளர்களில் பெரும்பாலும் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோரை மட்டுமே இந்திய அணி எடுக்கும் எனலாம். தேவைப்பட்டால் சஹாலுக்கும், வாஷிங்டனுக்கும் வாய்ப்பு கொடுக்கும்.
பும்ரா, ஜடேஜாவுக்கு ஓய்வு… ஏன்?
அப்படியிருக்க பும்ராவுக்கும், ஜடேஜாவுக்கும் ஓய்வு வழங்கப்படலாம். பும்ரா நேரடியாகவே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு களமிறங்குவார். அக்சர் பட்டேலின் ஃபார்ம் மற்றும் அணியின் காம்பினேஷன் ஆகியவை குறித்து முடிவு எடுத்த பின்னரே ஜடேஜா சேர்க்கப்படுவாரா இல்லையா என்பதும் தெரியவரும். பெரும்பாலும் ஜடேஜா சாம்பியன்ஸ் டிராபி ஸ்குவாடில் இருந்து கழட்டிவிடப்படவே அதிக வாய்ப்புள்ளது. வேகபந்துவீச்சாளர்களில் சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, முகேஷ் குமாருக்கு இந்தியா வாய்ப்பு வழங்கலாம்.