அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட வழக்கின் எப்.ஐ.ஆர் இணையத்தில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
எப்.ஐ.ஆர் கசிந்தது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது. இதுகுறித்து விசாரிக்க மூன்று பெண் ஐ.பி.எஸ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது உயர் நீதிமன்றம். மேலும், சம்பந்தப்பட்ட மாணவிக்கு நஷ்ட ஈடாக ரூ. 25 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
தற்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எப்.ஐ.ஆர் எப்படி வெளியானது என்பது குறித்து தேசிய தகவல் மையம் கூறியுள்ளது.
“எப்.ஐ.ஆரை இந்திய தண்டனை சட்டத்திலிருந்து (IPC) பாரதிய நியாய சன்ஹிதாவிற்கு (BNS) இணையத்தில் மாற்றும்போது தொழில்நுட்ப கோளாறுகளால் அது கசிந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.
தேசிய தகவல் மையத்தின் மூத்த இயக்குநர் அருள்மொழி வர்மன், “மாநில குற்றப்பிரிவு ஆவணக் கூடத்தின் வழிகாட்டுதலின் படி, பி.என்.எஸ்.எஸ் 64, 67, 68, 70, 79 பிரிவுகளில் பதியப்படும் வழக்குகள் எப்.ஐ.ஆரை பொதுமக்கள் பார்க்க முடிகிற பக்கத்தில் காட்டாது. ஆனால், இந்த சம்பவத்திற்குப் பின்பு, மாநில குற்றப்பிரிவு ஆவணக் கூடத்தின் எப்.ஐ.ஆர் பக்கத்தை ஒருமுறை சரிபார்க்கத் தேசிய தகவல் மையம் அறிவுறுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…