ரூ.1.26 கோடி காப்பீட்டு தொகையை பெற விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய தொழிலதிபரை குஜராத் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம், வட்கம் அருகேயுள்ள தன்புரா கிராமத்தின் சாலையில் கடந்த 27-ம் தேதி ஒரு கார் தீயில் எரிந்து உருக்குலைந்து கிடப்பதாக உள்ளூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து, காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சடலம் தீயில் எரிந்து எலும்பு கூடாக காட்சியளித்தது.
போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது விபத்துக்கான எந்த காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கார் எப்படி எரிந்தது, காரின் சொந்தக்காரர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது தன்புரா கிராமத்தை சேர்ந்த ஓட்டல் அதிபர் பகவான்சிங் கர்சான்ஜி பார்மர் (40) என்பவரின் கார் தீயில் எரிந்திருப்பது தெரியவந்தது.
அவரது செல்போன் உரையாடல்கள், அவர் யார், யாரிடம் பேசினார் என்பது குறித்து போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பகவான்சிங் கர்சான்ஜி பார்மர் உயிரோடு தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் மகேஷ், பீமா ராஜ்புத், தேவா, சுரேஷ் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். அவர்கள் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
பகவான்சிங் கர்சான்ஜி பார்மர் உள்ளூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இதற்காக அவர், நண்பர்களிடம் ரூ.15 லட்சம் கடன் பெற்றிருந்தார். அதோடு கடனில் வாங்கிய அவரது காருக்கு உடனடியாக ரூ.2 லட்சம் செலுத்த வேண்டிய சூழல் எழுந்தது. இந்த கடன்களை அடைக்க பார்மர் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தார்.
எங்கள் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். மயானத்தில் அவரது சடலத்தை தோண்டி எடுத்த பார்மர், கடந்த 27-ம் தேதி அந்த சடலத்தை தனது காரில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.
எல்ஐசி நிறுவனத்தில் ரூ.26 லட்சத்துக்கு பார்மர் பாலிசி எடுத்துள்ளார். அதோடு கார் விபத்தில் உயிரிழந்தால் ரூ.1 கோடிக்கான காப்பீடு தொகை கிடைக்கும். மொத்தம் ரூ.1.26 கோடி காப்பீட்டு தொகையை பெற, விபத்தில் உயிரிழந்ததாக பார்மர் நாடகமாடினார். காப்பீட்டு தொகையில் எங்களுக்கும் பணம் தருவதாக அவர் உறுதி அளித்தார். இதனால் அவருக்கு உதவி செய்தோம். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து பார்மரின் 4 நண்பர்களையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பார்மரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.