காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட வன்கொடுமை புகார் வெளியானது சட்டத்துக்கு புறம்பானது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் திமுக சம்பந்தப்பட்ட நபரை காப்பாற்றுவதற்காக அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கசிந்தது கண்டிக்கத்தக்கது.
அந்தப் புகாரில், “அந்த சாரிடம் கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும்” என்றிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. எங்களுக்கும் யார் அந்த சார் என்று தெரிய வேண்டும். உண்மையான குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது வரை யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதிலே இல்லை. புகார் வந்த விவகாரம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக காவல் அதிகாரிகளும் அமைச்சரும் பதில் அளிக்கின்றனர்.
அதிமுக ஐடி பிரிவு சார்பில், யார் அந்த சார் என்ற பதாகைகளைக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், திமுக அரசு அவர்கள் மீது பல வழக்குகள் போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. திமுக அமைச்சர்கள் யாரையோ காப்பாற்றுவதற்காக முயற்சி செய்கிறார்கள். அதனை மறைப்பதற்காக கைதான நபர் திமுக நிர்வாகி இல்லை என பொய்யை பரப்புகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவரை காவல்துறை கண்காணிக்காததால் பல்கலைக்கழகத்தில் சர்வசாதாரணமாக சுற்றி வந்துள்ளார். சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு தொடர்பான உண்மைகள் வெளிவர வேண்டும். திமுகவில் இல்லாதவர் எப்படி திமுக பவள விழாவில் கலந்து கொள்ள முடியும். ஞானசேகரன் வீட்டில் அமைச்சர் உணவு சாப்பிடும் போட்டோக்கள் வெளியே வந்துள்ளன. இதைக் கூறினால் திமுக நிர்வாகி இல்லை என்கின்றனர். கடந்த 2024-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை ஆண்டாக அமைந்துவிட்டது. 2025 பெண்களுக்கு பாதுகாப்பான ஆண்டாக அமையும் என நம்புவோம்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை இப்போது திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.