அன்புள்ள பேத்திக்கு,
“உன் பாட்டியோட whatsapp மெசேஜ். கடிதம் எழுதற காலத்துல நான் பிறந்தேன். நீயோ ஸ்மார்ட்போன் காலத்துல பிறந்தவ. உனக்கு ஒரு தகவல் சொல்லணும்னா அதை வாட்ஸ்அப்ல அனுப்புனா மட்டும்தான் உன் கவனத்துக்கு வரும்னு உங்க அம்மாவோட போன்ல இருந்து இந்த மெசேஜை அனுப்புறேன்.
வேலை விஷயமா உலகத்தையே சுத்துறவ நீ. வேலை முடிச்சு களைச்சிப் போய் படுக்கையில விழறப்போ கொஞ்ச நேரம் சோஷியல் மீடியா பார்ப்பியே… அப்போ இந்த whatsapp மெசேஜை நீ கட்டாயம் படிப்பேங்கிற நம்பிக்கையில இதை நான் டைப் பண்ண ஆரம்பிக்கிறேன்.
நான் பொறந்தது ஒரு குக்கிராமத்துல. வாழ்க்கைப்பட்டதும் அதே மாதிரி ஒரு குக்கிராமத்துலதான். என் பிறந்த வீட்லயும் சரி புகுந்த வீட்லயும் சரி, மலஜலம் போக ஒரு மறைவிடம் எனக்கு வாய்க்கல. என் வயசு ஒத்த எல்லா பொண்ணுங்களுக்கும் அப்போ அதுதான் தலைவிதி. எங்க ஊரு ஆம்பளைங்களுக்கு எல்லாம் ரெண்டுக்குப் போறது காலைக்கடன். ஆனா பொம்பளைகளுக்கு எல்லாம் அது இரவுக்கடன். ஊரடங்குன பிறகு ஒரு லாந்தரோ, இல்ல ஒரு டார்ச் லைட்டோ துணைக்கு எடுத்துக்கிட்டு கும்பலா போவோம். அப்படித்தான் ஒருநாள் தங்கச்சி அவசரத்துக்கு நானும் கூட போனேன்.
எங்க பின்னாடி கேட்ட காலடி சத்தத்தை பேயோ, பூதமோன்னு நம்புற அறியாப்பருவம் அது. அந்த பூதங்க கிட்ட இருந்து எப்படியோ நான் தப்பிப் பிழைச்சேன். ஆனா, என் பின்னாடி பிறந்தவ மாட்டிக்கிட்டா. தலை துவண்டு சரிஞ்சு கிடந்தவளை தூக்கிட்டு வந்து ‘பாம்பு கடிச்சி செத்துட்டா’ன்னு அழுதுட்டே புதைச்சுட்டாங்க. பின்னாடி வந்தது பூதமில்ல, கடிச்சது பாம்புமில்லன்னு எனக்கு புரியறதுக்கே பல வருஷம் ஆகிப்போச்சு.
எனக்கும் கல்யாணமாச்சு. என் வயித்துல உங்க அம்மா வந்து பொறந்தா. அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன், அவ மறைவிடம் தேடி போறதுக்கு முன்னாடியே ஓலை தடுப்புலயாவது ஒரு கக்கூஸ கட்டணும்னு. உங்க அம்மா வளர்ந்தா. என் தீர்மானமும் அவள மாதிரியே வளர்ந்து நின்னுச்சு. என் மகளுக்கு ஒரு மறைவிடம் வேணும்னு நான் கேட்ட அன்னிக்கு, உன் தாத்தா எனக்கு சொன்ன அதே பதிலை தன் பொண்ணு விஷயத்துலயும் சொல்லிடுவாருன்னு ரொம்ப பயந்தேன். என்ன இருந்தாலும் உங்க அம்மா அவர் பெத்த பொண்ணு இல்லையா..? உடனடியா ஒரு குழியும் பக்கத்துக்கு ஒண்ணா ரெண்டு செங்கல்லும் வெச்சு தென்னம் ஓலையில மறைப்ப கட்டினாரு.
என் தங்கச்சிய அந்த ராத்திரியில விட்டுட்டு ஓடி வந்த பிறகு, நான் நிம்மதியா தூங்குனது அன்னிக்குத்தான்.
வாஷ் ரூம், ரெஸ்ட் ரூம்னு நுனி நாக்குல சொல்ற உனக்கு இந்த பாட்டியோட கஷ்டம் புரியுமோ என்னவோ… ஆனா, ஆம்பிளைங்க விஷயத்துல எனக்கு கிடைச்ச அனுபவத்தை வெச்சித்தானே, நான் உனக்கு சொல்ல வந்ததை சொல்ல முடியும்… நான் கொல்லைக்குப் போக பயந்தேன். உங்கம்மா தென்னை ஓலை மறைப்புல இருந்த ஓட்டைகளுக்கு பயந்தா. நீ இப்போ ரெஸ்ட் ரூம்ல இருக்க கேமராக்களுக்கு பயந்துகிட்டு இருக்க. எல்லா ஆம்பளைங்களும் இப்படி கிடையாதுதான். எனக்கும் அந்த நியாயம் தெரியும். ஆனா, ஒரு சொம்பு பாலுக்கு ஒரு துளி விஷமே அதிகமில்லையா..?
‘அதுக்காக உன்னை மாதிரியே பத்தாங்கிளாஸோட படிப்பை ஏற கட்டிட்டு, கல்யாணம் பண்ணிட்டு வீட்டோட இருக்க சொல்றியா’ங்கிற உன்னோட செல்ல கிண்டல் எனக்கு கேட்குது. என் தலைமுறை ‘வீடு தான் உலகம்’னு வாழ்ந்திடுச்சு. உன் தலைமுறைக்கு ‘உலகமே வீடு’ங்கிற நிதர்சனம் எனக்கும் தெரியும். என் பேத்தி உலகத்தையே சுத்தி வர்றவ அப்படிங்கிறதுல ஒரு ரகசியமான கர்வம் கூட எனக்கு உண்டு தெரியுமா?
சரி, என் பத்தாம் கிளாஸ் அறிவுக்கு எட்டுன வரைக்கும் நான் சில விஷயங்களை உனக்கு சொல்ல ஆசப்படுறேன். மன்னராட்சியோ, மக்களாட்சியோ நீயும் நானும் இந்த சமூகத்துக்கு வெறும் பொருள்கள் மட்டும்தான். தோற்றுப்போன மன்னனோட மனைவியில ஆரம்பிச்சு அந்த நாட்டுல இருக்கிற அத்தனை பெண்களையும் ஜெயிச்ச மன்னனும் அவன் சேனைகளும் பெண்டாளுவாங்கலாம். போர்னு வந்தாலே, தோற்றவன் நாட்டுப் பெண்களோட உடம்புதான் ஜெயிச்ச ஆண்களோட வெற்றியை அறிவிக்க தேவைப்படுது. மக்களாட்சியே வந்தாலும், பொண்ணுங்களுக்கு, ராத்திரி எட்டு மணியே நடுராத்திரி தான். படிக்கிற இடத்துலேயும் பாதுகாப்பில்ல. நைட்டெல்லாம் நோயாளிகளைப் பார்த்துட்டு களைச்சுப்போய் படுத்த பொண்ணுக்கும் பாதுகாப்பில்ல. அவகிட்ட எவனாவது அத்துமீறினாலோ, அவ உயிரையே எடுத்தாலோ ‘நீ ஏன் நைட் எட்டு மணிக்கு வெளியில வந்தே’ அப்படிங்கற கேள்வி தான் இங்கே கேட்கப்படும்.
உலகத்தையே சுத்தி வர நீ ‘நல்லவன், கெட்டவன்’ தெரிஞ்சு பழகு. உனக்கு ஒரு பாதுகாப்பு கலையையும் சேர்த்து பழகு. பாத்ரூம் டைல்ஸ்ல கேமரா இருக்கான்னு கண்டுபிடிக்க பழகு. உன்னை பாதுகாக்கிற நம்பர்களை உன் செல்போன்ல சேமிக்க பழகு. நமக்கெல்லாம் அந்த மாதிரி பிரச்னை வராதுங்கிற கண்மூடித்தனமான நம்பிக்கையை கைவிடப் பழகு. கோயிலுக்குப் போனாலும் கடவுள் பார்த்துப்பாருன்னு அவர் மேல பாரத்தை போடாம உன் சுயபுத்தியை நம்ப பழகு. நெருப்புன்னா வாய் சுட்டுடாது. உனக்கே அப்படியொரு வன்முறை நடந்திடுச்சின்னா, அது உனக்கான அவமானமில்ல… அது தப்பு செஞ்சவனோட அவமானம் மட்டுமே… மத்தபடி நீ இன்னும் உன் வேலையில பல படிகள் முன்னேற என்னோட ஆசிர்வாதங்கள்…
லவ் யூ
உன் பாட்டி”
Vikatan Play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…