மதுக்கடையில் திருட சென்றவர் அதிகமாக மது அருந்தி சிக்கிய சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் தனியார் வசமே உள்ளன. இந்நிலையில், மேதக் மாவட்ட தலைநகரில் உள்ள கனகதுர்கா ஒயின்ஸ் என்னும் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை, வழக்கம்போல் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு வியாபாரத்துக்குப் பின்னர் அதன் உரிமையாளர் பூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
அதன் பின்னர், நள்ளிரவில் ஒரு திருடன், அக்கடையின் கூரையில் உள்ள டைல்ஸை உடைத்துக்கொண்டு, கடைக்குள் குதித்து, முன் ஜாக்கிரதை நடவடிக்கையாக அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் வயர்களை துண்டித்துள்ளார். அதன் பின்னர் கல்லாப் பெட்டியில் இரவு வைத்து விட்டு போன பணத்தை அள்ளி பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.
வந்த காரியத்தை வெற்றிகரமாக சாதித்து விட்ட அந்த திருடன், மீண்டும் கடையை விட்டு வெளியேறும் முன்பு, அங்கிருந்த மதுபான பாட்டில்களை பார்த்துள்ளார். அதன் மீது ஆசை வந்ததால் மது பாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தார். ஒவ்வொன்றாக குடித்ததில், அவருக்கு போதை தலைக்கேறியது. அதன் பின், தன்னை மறந்து போதையில் அதே கடையிலேயே தூங்கி விட்டார். மறுநாள் வரை எழுந்திரிக்கவில்லை.
இந்நிலையில், மறுநாள் திங்கட்கிழமை காலை கடையின் உரிமையாளர் கடையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். கடையில் ஒரு திருடன் படுத்து தூங்கி கொண்டிருப்பதை பார்த்து ஊழியர்களை அழைத்தார். அவரை சோதனை செய்து பார்த்ததில் தனது கடையில் இருந்த பணத்தை திருடி இருப்பதும், அதற்காக கூரையை உடைத்துக் கொண்டு உள்ளே வந்துள்ளதையும், கண்காணிப்பு கேமாராக்களை இயங்க விடாமல் செய்ததையும் அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார்.
உடனே இது குறித்து மேதக் போலீஸில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வந்து மயங்கி கிடந்த அந்த திருடனை அப்படியே தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு திருடனை தெளிய வைத்து, அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.