அமராவதி: ஆங்கில புத்தாண்டையொட்டி டிசம்பர் மாதம் 31-ம் தேதி மட்டும் ஆந்திராவில் ரூ.200 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.
ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் மாதம் 31-ம் தேதி ஆந்திராவில் ரூ.200 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது தெரியவந்துள்ளது. ஆங்கில புத்தாண்டையொட்டி 3 நாட்களுக்கு முன்னதாக டெப்போவில் இருந்து மதுபானங்கள் கடைகள், பார்கள் மற்றும் கிளப்புகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆந்திர அரசும் டிசம்பர் 31-ம் தேதி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட இரவு கூடுதலாக 2 மணி நேரம் மது விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. அதனால் டிசம்பர் 31-ம் தேதி மொத்தம் 14 மணி நேரம் மது விற்பனை ஆந்திராவில் நடந்தது.
இதன் காரணமாக அன்றைய தினம் 60 லட்சம் குவார்ட்டர் பாட்டில்களும், 18 லட்சம் பீர் பாட்டில்களும் விற்று தீர்ந்தன. கடந்த 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களும், ரூ.331.85 கோடி மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் கடைகள், பார்கள் மற்றும் கிளப்புகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் 31-ம் தேதி மட்டும் ரூ.200 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக மதுக்கடை உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதாவது அன்றைய தினம் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.14.28 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் ஆந்திராவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.80 கோடி வரை மது விற்பனை நடக்கும் என்பது குறிப்பிடதக்கது.