நாகப்பட்டினம்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் 2025 புத்தாண்டு விழா நேற்று முன்தினம் இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் உட்டபட பல்லாயிரக்கணக்கானோர், பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயத்தில் குவிந்தனர்.
பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மறையுரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து, 2025-ம் ஆண்டை வரவேற்கும் வகையில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு, தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் குத்துவிளக்கேற்றி, புத்தாண்டை வரவேற்றார். தொடர்ந்து ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பேராலயத்தில் நேற்று அதிகாலை முதல் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மலையாளம், கொங்கணி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலிகள் நடைபெற்றன.
கன்னட மக்களின் வேண்டுகோளை ஏற்று, நேற்று காலை 5 மணிக்கு கன்னட மொழியில் திருப்பலி தொடங்கியது. பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ, ஆயர் சூசைநாதன், துணை ஆயர் ஆரோக்கியராஜ் சதீஷ்குமார் ஆகியோர் கன்னட திருப்பலியை நடத்தினர்.
பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத் தந்தை அற்புதராஜ், நிர்வாக தந்தை பரிசுத்தராஜ், உதவி பங்குத் தந்தைகள் மற்றும் நிர்வாக தந்தைகள், அருட்சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இதில் கலந்துகொண்டனர். நடப்பாண்டு முதல் தினமும் காலை 5 மணிக்கு கன்னட மொழியில் திருப்பலி நடைபெறும்.
புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. அருண் கபிலன் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் வேளாங்கண்ணியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.