அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், அந்த மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் பாமக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எனவே, தடையை மீறி போராட்டம் நடத்த பாமகவினர் திட்டமிட்டனர். அதையடுத்து வள்ளுவர் கோட்டம் பகுதியில் போலீஸார் குவி்க்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வள்ளுவர் கோட்டம் பகுதிக்கு பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி காரில் வந்தார். காவல்துறையினர் அவரைக் கைது செய்ய தயாராக இருந்தனர். காரை மகளிர் போலீஸார் சுற்றி வளைத்தனர்.
அதையடுத்து காரில் இருந்து இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அவரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதற்கு எதிராக பாமகவினர் கோஷமிட்டதால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. வேனில் ஏற்றப்பட்ட சவுமியா அன்புமணி, எங்கள் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும் அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராகவும் கோஷமிட்டார். இதற்கிடையே, சவுமியா அன்புமணி கைதுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் திமுக அரசின் மீது மக்களின் கோபம் ஆரம்பித்துவிட்டது. இதன் விளைவு 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதிபலிக்கும்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: சவுமியா அன்புமணி, தனது போராட்டக் குரலை எழுப்புவதற்கு முன்பே கைது செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர் கைதுகள் மூலம் உண்மையை மூடி மறைத்துவிட முடியாது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராடினால் கைதா? அண்ணா பல்கலை. மாணவி சிக்கலில் திமுக அரசை குற்றவுணர்ச்சி உறுத்துகிறதா? இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ‘அந்த சார்’ உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: ஜனநாயகரீதியில் போராடுவோரின் குரல்வளையை நசுக்குவதுதான் திராவிடர் மாடல் அரசின் சாதனையா? இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.