டெல் அவில்: காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போரில் காசாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இன்னும் போரின் தாக்கம் குறையவில்லை. இதனால் பலர் தெற்கு காசாவில் உள்ள பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இந்நிலையில், இன்று காலை மக்கள் தங்கியிருந்த தற்காலிக கூடாரங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில், மூன்று குழந்தைகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களில் காசா காவல் துறையின் பொது இயக்குநரான மேஜர் ஜெனரல் மஹ்மூத் சாலா மற்றும் அவரது துணைத் தளபதி பிரிக் ஜெனரல் ஹோசம் ஷாவான் ஆகியோர் அடங்குவர். தற்போதுவரை பலியானோரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் கடும் குளிரில் கூடாரங்களில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.