மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலை மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் உக்ரைன் எதிர்த்து வருகிறது.
இந்த போரில் இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனின் உள்கட்டமைப்புகளை ரஷியா தொடர்ந்து தாக்கி வருகிறது. அதே சமயம், இந்த போரை தொடர்ந்து நடத்துவதற்கு ரஷியா கடுமையான பொருட்செலவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதன் விளைவாக ரஷியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் ரஷிய மத்திய வங்கியின் 21% வட்டி விகித அமலாக்கம் ஆகியவை ரஷிய மக்களை கவலையடையச் செய்துள்ளது.
இந்த சூழலில், 2025 புத்தாண்டையொட்டி ரஷிய மக்களுக்கு அந்நாட்டு அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்த புத்தாண்டில், நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறோம். எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம், நாம் முன்னேறுவோம். ரஷிய மக்களின் நல்வாழ்வு என்பதே நமது முன்னுரிமை” என்று தெரிவித்துள்ளார்.