புதுடெல்லி: ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவத் தயாராக இருப்பதாக ஈரான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது, நம்பிக்கையை சற்றே துளிர்க்க வைத்துள்ளது.
காசா போராட்ட குழுவுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஈரானுடன் இஸ்ரேல் ராணுவம் மோதல் போக்கு கொண்டுள்ளது. ஈரானுக்கு ஏமனைச் சேர்ந்த ஹவுத்தி போராட்டக் குழு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஹவுத்தி போராட்ட குழுவைச் சேர்ந்த தலைவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் அந்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் தலைமறைவாக உள்ளனர். அதனால், அந்நாட்டைச் சேர்ந்த தலைவர்களை இந்திய வெளியுறவு அமைச்சகம், தொடர்புகொண்டு இப்பிரச்சினை குறித்து பேசுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ தயாராக இருப்பதாக ஈரான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “நாங்கள் செவிலியர் நிமிஷா பிரியாவின் பிரச்சினையை கவனத்தில் கொண்டுள்ளோம். அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இந்த வழக்கில் எங்களால் முடிந்ததைச் செய்வோம் ” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நிமிஷா பிரியா (36 வயது) கடந்த 2017 ம் ஆண்டு ஏமனில் செவிலியராக பணியாற்றியபோது, அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு அவர் நீதிமன்றங்களை நாடினார். ஆனால் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
மகளை எப்படியாவது உயிரோடு மீட்டுவிட வேண்டும் என்று மாதக்கணக்கில் அங்கே தங்கியிருகிறார் 57 வயதான அவரது தாய் பிரேமா குமாரி. ஏமன் நாட்டு சட்டப்படி இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடாக பணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும் எனும் வழக்கம் உள்ளது. இதனை பயன்படுத்தி, நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
பிரேமாவுக்கு ஏமனில் வசிக்கும் இந்தியரான சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் உதவ முன்வந்தார். இப்போது அங்கே ‘சேவ் நிமிஷா இண்டர்நேஷனல் கவுன்சில்’ என்றொரு அமைப்பு கூட தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கவுன்சிலில் சாமுவேல் பாஸ்கரன் உறுப்பினராக இருக்கிறார். அவருடைய உதவியுடன் பிரேமா குமாரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற, ஏமன் அதிபர் ரஷாத் அல் அலிமி உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. முழு பின்னணி குறித்த வீடியோ ஸ்டோரி…