ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தப்பியோடிய 2 தீவிரவாதிகளின் சொத்துகளை போலீஸார் முடக்கியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், பட்டியன்-தனமண்டி பகுதியை சேர்ந்த இஷ்தியாக் அகமது, ஜாகித் அலி கான் ஆகிய இருவரும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தப்பியோடிய இவர்கள், அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இருவருக்கும் சொந்தமான நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீஸார் நேற்று முன்தினம் முடக்கி வைத்தனர். தனமண்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு அடிப்படையில், தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த சொத்துகள் முடக்கப்பட்டன.
பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் தீவிரவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் நெட்வொர்க்கை தகர்க்க ஜம்மு காஷ்மீர் காவல்துறை தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.