பிரயாக்ராஜ்: மகா கும்பமேளா வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த விழாவுக்காக உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி சாதுக்களுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கும்பமேளா நடைபெறும்போது பிரயாக்ராஜில் டீக்கடைகள், பழச்சாறு கடைகள் மற்றும் பூக்கடைகள் வைப்பதற்கு இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி அளிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் அவர் எச்சில் துப்பி, சிறுநீர் கழித்து அசுத்தம் செய்வர். கும்பமேளா அழகாகவும், சுத்தமாகவும், பிரம்மாண்டமாகவும், புனிதத்தன்மையுடன் அமைதியாக நடைபெற வேண்டும். இந்நிகழ்ச்சியின் பாதுகாப்பு மற்றும் புனிதத்தை காக்க இந்துக்கள் அல்லாதோரை இங்கு அனுமதிக்காமல் இருப்பது அவசியம். இவ்வாறு மஹந்த் ரவீந்திர புரி கூறினார்.
கும்பமேளாவுக்கு கோடிக்கணக்கான மக்கள் திரள்வதால், இது வேற்றுமையில் ஒற்றுமைக்கு உதாரணமாக உள்ளது. இது சமூகத்தில் பிரிவினை மற்றும் வெறுப்புணர்வை அகற்றுகிறது என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சமீபத்தில் கூறிய நிலையில், மஹந்த் ரவீந்திர புரி இதுபோன்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளாவில் உணவு கடைகள் அமைப்பதற்கு இந்துக்கள் அல்லாதோரை தடுக்கும் அகில பாரதிய அகார பரிஷத் அமைப்பின் திட்டத்துக்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கை சமூகத்தில் பிரிவை ஏற்படுத்தும் என அந்த அமைப்பு கூறியுள்ளது.