சகோதரிகளுடன் சமாதானம் ஆகிவிட்ட பிரபு, ராம்குமார் – சிவாஜி குடும்ப சொத்து விவகாரம் முடிவுக்கு வந்ததா?

நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, தேன்மொழி இருவரும் தங்கள் சகோதரர்கள் பிரபு, ராம்குமார் இருவர் மீதும் குடும்ப சொத்து தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது அவர்களுக்கிடையில்  சமரசம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது  தொடர்பாக சிவாஜி குடும்பத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

”தமிழ் சினிமாவுல கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு உதாரணம் சொல்லணும்னா சிவாஜி குடும்பத்தைதான் சொல்வாங்க. சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் ஒன்றரை ஏக்கரில் மினி வெள்ளை மாளிகை போல இருக்கும்  ‘அன்னை இல்ல’த்துல சிவாஜி மட்டுமில்லாம அவருடைய சகோதரர்கள் தங்கவேலு, சண்முகம் குடும்பத்தினர், தங்கை பத்மாவதி குடும்பம்னு ஒரு காலத்துல எல்லாரும் ஒற்றுமையா வாழ்ந்து வந்தாங்க.

சிவாஜி நடிச்ச எத்தனையோ படங்களின் படப்பிடிப்புகள் அந்த வீட்டுல நடந்திருக்கு. வீட்டின் கிரவுன்ட் ஃப்ளோரிலிருக்கும் டைனிங் ஹால்ல குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டாங்கன்னா, அந்தக் காட்சி பார்க்க அவ்ளோ அழகா இருக்கும். வீட்டைப் பராமரிக்கன்னு சுமார் இருபதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் இருப்பாங்க. வேலைக்காரங்களுக்கும் வீட்டு வளாகத்துலயே தங்க இடம் கொடுத்து வச்சிருந்தது அன்னை இல்லம்.

சிவாஜி குடும்பம்

சிவாஜி மகள் சாந்தி கல்யாணமாகித் தனியே போன பிறகும் கூட ஞாயிற்றுக் கிழமைன்னா , அன்னை இல்லம் வந்திட, எல்லாரும் ஒண்ணாதான் சாப்பிடுவாங்க.

இந்தச் சூழல்ல சாந்தி, தேன்மொழி இருவருமே கல்யாணமாகிப் போன பிறகு பிரபு, ராம்குமார் இருவரும் சில சொத்துகளை வித்த போதுதான் பிரச்னை தொடங்குச்சுனு சொல்றாங்க. சென்னை ராயப்பேட்டையில் இருந்த சிவாஜி ஃபிலிம்ஸ் அலுவலகம் வேறொருவருக்கு கை மாறுச்சு, தவிர, தஞ்சாவூர் பக்கம் சிவாஜி குடும்பத்துக்கு இருந்த சில சொத்துகளும் விற்கப்பட்டிருக்கு. இந்த விஷயங்கள் தொடர்பா தங்களுக்கு எந்தத் தகவலுமே தெரிவிக்கப்படலைன்னு சாந்தி, தேன்மொழி இருவருக்குமே வருத்தம்.

பிரபு, ராம்குமார் குடும்பத்துடன் சேர்ந்து சிவாஜியின் தம்பி சண்முகத்தின் குடும்பமும் அன்னை இல்லத்திலேயே வசித்து வந்த நிலையில், அப்பா வீட்டில் நம்மைக்காட்டிலும் சித்தப்பா குடும்பத்துக்கு அதிக  உரிமை இருப்பது போல உணரத் தொடங்கினாங்க சாந்தி, தேன்மொழி இருவருமே.

சொத்து தொடர்பான மனக்கசப்பு ஒருகட்டத்துல அதிகமாகி அக்கா தங்கைகள் ரெண்டு பேரையும் சகோதரர்களுக்கெதிரா நீதிமன்றம் வரை கொண்டு போய் நிறுத்திடுச்சு.

சிவாஜிக்குச் சொந்தமான சாந்தி திரையரங்கம் கைமாறியது தொடர்பா சாந்தி, தேன்மொழி இருவருமே கோர்ட்ல வழக்குத் தொடர, அந்த நேரத்துல அந்தச் செய்தி மீடியாவுல பெரிசா விவாதிக்கப் பட்டது.

இந்த நிலையிலதான் ‘சிவாஜி குடும்பத்தில் சொத்துப்  பிரச்னை; உயில்  போலிங்கிற ரீதியில் மீடியாவில் செய்திகள் வெளியாக, ராம்குமார், பிரபு ரெண்டு பேரையுமே அது ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கு. இதனால் சகோதரிகள்கிட்ட  இது விஷயமாப்  பேசியிருக்காங்க.

சிவாஜி குடும்பம்

பேச்சுவார்த்தை முடிவுல சில சொத்துகளை சாந்தி, தேன்மொழி இருவருக்கும் தர பிரபு, ராம்குமார் தரப்பு சம்மதிச்சதாகத் தெரியுது. அதன்படி ராயப்பேட்டை சிவாஜி ஃபிலிம்ஸ் எதிரே இருந்த இடத்தை அக்கா தங்கைகள் இருவருக்கும் சரி  பாதியாப் பிரிச்சுக்கச் சொல்லிக் கொடுத்துட்டாங்களாம்.

தவிர, சொத்து தொடர்பான இனி குடும்பத்துக்குள்ள பிரச்னை இருக்ககூடாதுனு பேசிக்கிட்டாங்களாம்”  என்கிறார்கள் இவர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.