‘தமிழக அரசின் நிலைப்பாடு பாரபட்சமானது’ – பொங்கல் போனஸ் அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்

மதுரை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அறிவித்த போனஸ் ஏமாற்றம் தரும் அறிவிப்பாக உள்ளது என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜ ராஜேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘சி’ மற்றும் ‘ டி’ பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத் தொகையும், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை சம்பளம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023-2024 நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு ரூ.1,000 கருணைத் தொகையும் அறிவித்துள்ளது.

2006-ம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி 2006-ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்கள் ரூ.7,000 போனஸாக பெற்று வருகின்றனர். அதனைப் பின்பற்றி தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸ் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 போனஸ் மட்டும் வழங்குவது ஏற்புடையதல்ல. மாநில அரசின் இத்தகைய பாரபட்சமான நிலைப்பாட்டுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மத்திய அரசு வழஙகுவது போல் ரூ.7,000 பொங்கல் போனஸாக வழங்க வேண்டும். ஏ&பி பிரிவு அலுவலர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட போனஸ் மற்றும் தொகுப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பாரபட்சமின்றி ரூ.7000 பொங்கல் போனஸாக வழங்க வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். வாசிக்க > தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.