திசாநாயக்க சொன்ன பிறகும் தீர்வு கிடைக்கலையே! – தொடரும் கைதுகளால் துவளும் மீனவர்கள்

டிசம்பர் 15-ல் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார் இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்க. அப்போது, “மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்” என்று திசாநாயக்கவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அவரும், “இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வைக்காண விரும்புகிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இதைக் கேட்டு தமிழக மீனவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனல், அந்த நிம்மதி 10 நாள்கூட நீடிக்கவில்லை.

இலங்கை அதிபர் வந்து சென்ற ஒரே வாரத்தில் ராமேசுவரத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்​படகுகளை சிறைபிடித்த இலங்கைக் கடற்படை, அதிலிருந்த 17 மீனவர்​களையும் கைது செய்தது. இது தமிழக மீனவர்களை மீண்டும் அலுப்பும் சலிப்பும் அடையவைத்​துள்ளது. கடந்த 10 ஆண்டு​களில் 3,288 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

558 விசைப்​படகுகள் சிறைபிடிக்​கப்​பட்டு அதில் 365 படகுகள் அரசுடமை​யாக்​கபட்​டுள்ளது. கடந்த 5 மாதங்​களில் மட்டுமே 200-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கைக் கடற்படை, 50-க்கும் மேற்பட்ட விசைப்​படகுகளை பறிமுதல் செய்திருக்​கிறது.

முன்பெல்லாம் கைது செய்யப்​படும் மீனவர்​களையும் அவர்களது படகுகளையும் இலங்கை அரசு சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு விடுவித்து வந்தது. ஆனால், சமீப காலமாக சட்டத்தை திருத்தி, தண்டனைகளை கடுமை​யாக்கி​ உள்​ளதுடன், அபராதங்​களையும் இலங்கை மதிப்பில் கோடிகளில் விதித்து வருகிறது.

இதனால், தமிழக மீனவர்கள் பலரும் மீன் பிடி தொழிலையே மறந்து​விட்டு மாற்று வேலைகளை தேடி அண்டை மாவட்​டங்​களுக்கு இடம் பெயர்ந்து வருகின்​றனர். இதனால், தமிழகத்தில் மீன்பிடி தொழிலே கேள்விக்​குறியாகி வருகிறது.

இரு நாட்டு மீனவர்​களுக்​கிடையான பிரச்​சினைக்கு நிரந்தர தீர்வு காண, மத்திய அரசு இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும் என தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்​றனர். இந்த நிலையில், இலங்கை அதிபர் இந்தியா​வுக்கே வந்து நம்பிக்கை அளித்துச் சென்ற பிறகும் மீனவர் கைது நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் அவநம்​பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 10 ஆண்டு​களுக்கும் மேலாக கிடப்பில் போடப்​பட்​டுள்ள இரு நாட்டு மீனவர்கள் இடையேயான பேச்சு​வார்த்தையை உடனடியாக நடத்தி தீர்வு​கண்டால் மட்டுமே நாங்கள் நிம்ம​தியாக தொழில் செய்ய முடியும் என்கிறார்கள் ராமநாத​புரம் மாவட்ட மீனவர்கள்.

ஜேசுராஜா

இதுகுறித்து விரிவாகப் பேசிய இந்திய – இலங்கை மீனவர் பேச்சு​வார்த்தைக் குழு தலைவர் ஜேசுராஜா, “இரு நாட்டுத் தலைவர்​களின் பேச்சு​வார்த்​தைக்குப் பிறகு நல்லெண்ண அடிப்​படையில் இரு நாட்டு சிறைகளிலும் உள்ள இரு நாட்டு மீனவர்​களையும் விடுதலை செய்திருக்​கலாம். ஆனால், அது நடக்க​வில்லை. மாறாக, இலங்கை அதிபர் இந்தியா வந்து சென்ற ஒரே வாரத்தில் ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் கைது செய்யப்​பட்​டுள்​ளனர். ஒரு விசைப்​படகின் மதிப்பு ரு.25 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாய் வரை வருகிறது.

மீனவர்​களின் ஒட்டுமொத்த வாழ்வா​தாரமே அதுதான். அப்படி இருக்கையில் சிறைபிடிக்கும் விசைப்​படகுகளை சர்வசா​தா​ரணமாக நாட்டுடமை ஆக்கு​கிறது இலங்கை. படகு ஓட்டுநர்​களுக்கும் ஆண்டுக் கணக்கில் சிறை விதிக்​கிறார்கள். இலங்கையின் மனிதாபி​மானமற்ற இந்த நடவடிக்கைகளால் தமிழக மீனவர்​களின் வாழ்வா​தாரம் முற்றிலும் பாதிக்​கப்​பட்டுள்ளது.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்​த​திலிருந்து நாம் மீன்கள் உற்பத்​தி​யாகும் இடத்திற்குச் செல்ல வேண்டிய கட்டா​யத்​திற்கு தள்ளப்​பட்​டோம். 2014-க்கு பின் இருநாட்டு மீனவர்கள் பேச்சு​வார்த்தை நடைபெற​வில்லை. எனவே, இனியும் தாமதிக்​காமல் இருநாட்டு மீனவர்கள் பேச்சு​வார்த்தையை நடத்தி, இந்தப் பிரச்​சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றார்.

கடந்த 50 ஆண்டு​களில் இரு நாட்டு தலைவர்கள் இடையே மீனவர் பிரச்சினை குறித்து பல முறை பேச்சு​வார்த்தை நடைபெற்று வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் நிரந்தர தீர்வு கிடைத்து​விடும் என நினைத்து ஏமாந்து போன தமிழக மீனவர்கள், திசா​நாயக்க – மோடி கூட்டுப் பிரகடனத்​துக்குப் பிறகும் அதே மன​நிலைக்கு தள்​ளப்​பட்​டிருக்​கிறார்​கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.