நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள நிலையில், டிரக் ஓட்டுநருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டது சம்சத் தின் ஜபார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் என்பதும், ஆப்கானிஸ்தானில் ராணுவப் பணியில் இருந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் என்று தெரியவந்துள்ளது. அது மட்டுமட்டலாது வாகனத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியும் இருந்தது. வாகனத்தில் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த நபர் நிச்சயமாக இத்தாக்குதலை தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை. இவருக்குப் பின்னணியில் இரண்டு பேர் இருந்துள்ளனர் என அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்பிஐ சந்தேகிக்கிறது. அதனால் தீவிரவாத தாக்குதல் என்ற கோணத்திலேயே இந்த சம்பவத்தை எஃப்பிஐ விசாரிக்கிறது.
தாக்குதலுக்கு முன் வீடியோ – தாக்குதலில் ஈடுபட்ட நபர் அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அந்த நபர் தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டதாகவும், அதனால் கொலையில் விருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர விரும்புவதாகவும் கூறி வீடியோக்களை பதிவு செய்து வைத்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு முன்னர் ஜாபர் தனது குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். ஆனால் திடீரென அந்தத் திட்டத்தைக் கைவிட்டு நியூ ஆர்லியன்ஸில் டிரக்கை செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளார். பின்னர், போலீஸ் உடனான துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டார். 35க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லாஸ் வெகாஸில் ஒரு தாக்குதல்: முன்னதாக லாஸ் வேகாஸில் ட்ரம்ப் இன்டர்நேஷனல் ஓட்டலில் டெஸ்லா சைபர் ட்ரக் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 7 பேர் காயமடைந்தனர்.
மக்கள் மீது திட்டமிட்டு கொடூர தாக்குதல்: கடந்த மாதம் ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்ட சந்தையில் சவுதியை சேர்ந்த மருத்துவர் வாகனத்தை இயக்கி இருந்தார். இதில் நான்கு பெண்கள் மற்றும் 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.
அதேபாணியில் வாகனத்தை கொண்டு மக்கள் மீது திட்டமிட்டு கொடூர தாக்குதல் மேற்கொள்ளும் சம்பவமாக நியூ ஆர்லியன்ஸ் நிகழ்வும் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், விரிவான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். நியூ ஆர்லியன்ஸ் சம்பவத்துக்கும் லாஸ் வெகாஸ் சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.