புதுடெல்லி: பஞ்சாப் விவசாயி டல்லேவாலின் உண்ணாவிரதப் போராட்டத்தில் எஸ்கேஎம் என்பி தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டார். கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சம்யுக்த்த கிசான் மோர்ச்சா(எஸ்கேஎம்) என்பி தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால், சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இப்போராட்டம், பஞ்சாப் மாநிலம் கண்ணூரி பார்டரில் 38-வது நாளாகத் தொடர்கிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், எஸ்கேஎம் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரான பி.ஆர்.பாண்டியன் அதில் கலந்து கொண்டார். இங்கு நிலவும் கடும் குளிரில் தமிழகத்திலிருந்து வந்த பி.ஆர்.பாண்டியன் கண்ணூரி பார்டரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “இந்திய விவசாயிகளுடைய உரிமைக்காகவும் நலனுக்காகவும் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் சம்யுக்த்த கிசான் மோர்ச்சா தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால். இவரது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்கிறோம்.
கடந்த டிசம்பர் 16-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 50 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு 10 ஆயிரம் விவசாயிகள் கைதாகினர். நாடாளுமன்ற மக்களவையின் எம்.பி.யான ஜோதிமணி, டல்லேவால் உடல்நிலையை கருத்தில் கொண்டு எம் எஸ்பி குறித்து அவசர முடிவெடுக்க வலியுறுத்தி உள்ளார். டிசம்பர் 23-ல் மெழுவர்த்தி ஏந்தி ஆதரவளித்துள்ளனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறோம்.
பிரதமர் மோடி உண்ணாவிரதப் போராட்டத்தையும் விவசாயிகளின் ஒற்றுமையையும் சீர்குழைக்க முயற்சிக்கிறார். உச்ச நீதிமன்றம் டல்லேவால் உடல் நலத்தை பாதுகாப்பதற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துள்ளது. அதே நேரம் எம்எஸ்பி உள்ளிட்ட கோரிக்கைகளின் நியாயத்தை நீதியரசர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே டல்லேவால் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது அவசியம்.
அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சார்பில் வலியுறுத்துகிறோம். ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருவதால் நாடு முழுவதும்100 கோடி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்ட முடிவுக்காக உணர்வுபூர்வமாக எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
டல்லேவால் உடல் நலம் குறித்து மிகுந்த அக்கறையுடனும் கவலையுடனும் எதிர்பார்த்து உள்ளனர். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது தமிழக விவசாயிகளுக்கு மிகுந்த மனவலியை அளித்திருக்கிறது. எனவே, மத்திய அரசை வலியுறுத்தியும், டல்லேவால் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.
போராட்டக் குழு அறிவிக்கிற அத்தனை போராட்டங்களையும் தமிழக, புதுச்சேரி விவசாயிகள் முழு மனதோடு ஆதரித்து நிறைவேற்றுவோம் என்கிற உறுதி அளிப்பதற்காக நாம் வந்திருக்கிறோம்” இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு, கர்நாடகா விவசாயிகள் மொத்தம் 20 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்கள், முன்னதாக நடைபெற்ற முழக்கப் போராட்டத்திலும் பங்கேற்றனர். 40வது நாள் போராட்டத்தில் 5 லட்சம் விவசாயிகள் நாடு முழுவதும் இருந்து பங்கேற்க உள்ளார்கள். இதில், எஸ்கேஎம் என்பியின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர்கள் லக்வீந்தர்சிங், அபிமன்யூகொஹார், தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் கர்நாடகா குருபுரு சாந்தக்குமார், சுதா தர்மலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.