புதுடெல்லி: இந்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 2021-22 முதல் 2025-26 வரை ரூ.69,515.71 கோடி ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை 2025-26 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த முடிவு 2025-26 வரை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இயற்கைப் பேரழிவுகளிலிருந்து பயிர்களை பாதுகாக்க உதவும்.
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியவற்றில் சில அம்சங்களைத் திருத்தவும் புதிய அம்சங்களைச் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர, இத்திட்டத்தை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, இழப்பீட்டைக் கணக்கிடுதல் மற்றும் கோரிக்கைகளை தீர்த்து வைத்தல் ஆகியவற்றை அதிகரிப்பதற்கும் ரூ.824.77 கோடி தொகுப்பு நிதியுடன் தனி நிதியத்தை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகளுக்கு மலிவு விலையில் டை-அம்மோனியம் பாஸ்பேட் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை என்.பி.எஸ் மானியத்தில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,500 என்ற தொகைக்கும் அப்பால் டிஏபி மீதான ஒரு முறை சிறப்பு தொகுப்பை நீட்டிப்பதற்கான உரங்கள் துறையின் முன்மொழிவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.