பாட்னா: பிஹார் மாநிலத்தின் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி ஜன் சுராஜ் கட்சி தலைவரும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
பிபிஎஸ்சி தேர்வுகளால் பாதிக்கப்பட்ட பல தேர்வர்கள் இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தி வரும் இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க காந்தி மைதானத்தில் வைத்து வியாழக்கிழமை இந்த உண்ணாவிரத போராட்டத்தை பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “பிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்வது, புதிய தேர்வுகளை நடத்துவது முதலான கோரிக்கைகளை உள்ளடக்கியது இந்தப் போராட்டம். தேர்வு நடத்தி அதன் மூலம் நிரப்பப்படும் பணிகளை விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்ட ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களின் பிரதிநிதிகள் தலைமைச் செயலாளர் அம்ரித் லால் மீனாவை திங்கள்கிழமை சந்தித்து பேசிய சில மணி நேரத்தில், ‘டிசம்பர் 13 அன்று நடந்த ஒருங்கிணைந்த தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் நிதிஷ் குமார் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த 48 மணிநேரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்துவேன்’ என்று பிரசாந்த் கிஷோர் முன்பே தெரிவித்திருந்தார்.
பிஹாரில் 70-வது பிபிஎஸ்சி (Bihar Public Service Commission) முதல்நிலைத் தேர்வு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. இதில், வினாத்தாள் கசிவு, தேர்வு அறைகளில் சிசிடிவி கேமராக்கள் இயங்காதது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாகவும், எனவே நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை முதல்வர் நிதிஷ் குமார் வீட்டுக்குள் நுழைய முயற்சித்த மாணவர்கள் மீது போலீஸார் தண்ணீர் பீச்சி அடித்து, தடியடி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.