மத்திய பிரதேச மாநிலத்தில் யூனியன் கார்பைடு ஆலையில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருக்கும் நச்சுக்கழிவுகளை அகற்றும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-3 இடைப்பட்ட இரவில் யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி ஆலையிலிருந்து அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தில் ஐசோசயனைட் (எம்ஐசி) வாயு கசிவு ஏற்பட்டதில் 5,479 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் நீண்ட கால உடல்நலப் பிரச்சினைக்கு ஆளாகினர். இது, உலகின் மிக மோசமான விஷவாயு விபத்தாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் நச்சுகளை அகற்றாத அதிகாரிகளுக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் டிசம்பர் 3-ம் தேதியன்று நடைபெற்ற விசாரணையின்போது கடும் கண்டனங்களை தெரிவித்தது. மேலும், அந்த நச்சுக்கழிவுகளை 4 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்ற காலக்கெடுவையும் நீதிமன்றம் விதித்தது. இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் மாநில அரசு மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தது. நீதிமன்றத்தின் தொடர்ச்சியான வலியுறுத்தல்களுக்குப் பிறகு நச்சுக்கழிவுகளை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து போபால் விஷவாயு துயர் நிவாரண மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர் ஸ்வதந்திர குமார் சிங் கூறியதாவது: போபால் விஷவாயு சம்பவம் நடந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து 377 டன் நச்சுக்கழிவுகளை அகற்றும் பணி புதன்கிழமை ( ஜன.1) இரவு தொடங்கியது. சீல் செய்யப்பட்ட 12 கண்டெய்னர் லாரிகளில் இந்த கழிவுகள் தலைநகர் போபாலில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள தார் மாவட்டத்தின் பிதாம்புர் இண்டஸ்ட்ரியல் பகுதிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஷிப்ட் முறையில் 100 பேர் கழிவுகளை பேக் செய்து லாரிகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை உடல்நல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் 3 மாதங்களுக்குள் நச்சுக்கழிவுகள் அனைத்தும் எரிக்கப்படும். இல்லையொன்றால் 9 மாதங்கள் ஆகலாம். சாம்பலில் நச்சுத்தன்மை இல்லை என்று உறுதிபடுத்தப்பட்ட பிறகு அவை பாதுகாப்பான முறையில் புதைக்கப்படும். இவ்வாறு ஸ்வதந்திர குமார் சிங் தெரிவித்தார்.