தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டேனேக்ரோவின் செடின்ஜே நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த வாய்த் தகராறு மோதலாக மாறியதில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் தற்கொலை செய்துகொண்டார்.
மான்டேனேக்ரோ நாட்டின் செடின்ஜே நகரில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. இங்கு அகோ மார்டினோவிக் (45) என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்த வந்தார். அவர் நாள் முழுவதும் மது அருந்திக் கொண்டிருந்தார். இதனால் விடுதி உரிமையாளருக்கும் அகோ மார்டினோவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மாலையில் வீட்டுக்கு சென்ற மார்டினோவிக் தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மீண்டும் மது விடுதிக்கு வந்தார். விடுதி உரிமையாளர் உட்பட 4 பேரை அவர் சுட்டுக் கொன்றார். மதுபான விடுதியைவிட்டு வெளியேறிய அவர் 3 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 12 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவத்தை அடுத்து மார்டினோவிக்கை பிடிக்க தனிப்படை அமைக்கப்ப்டடது. தலைநகர் பாட்காரிகாவிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரில் மார்டினோவிக் பதுங்கியிருந்தார். அவரை போலீஸார் சுற்றி வளைத்தபோது, மார்டினோவிக் துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த கொடூரமான சோக சம்பவத்தையடுத்து, 3 நாள் தேசிய துக்கம் அனுசரிக்க மான்டேனேக்ரோ அரசு உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் விசாரணையில் மார்டினோவிக் கடந்த 2005-ம் ஆண்டு இதுபோல் வன்முறையில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்பது தெரிந்தது. மான்டெனிக்ரோ மிகச் சிறிய நாடு. இதன் மக்கள் தொகை 6,20,000. இங்கு ஒவ்வொரு வீட்டிலும் துப்பாக்கி வைத்திருப்பது கலாச்சாரமாகவே உள்ளது. செடின்ஜே நகரில் கடந்த 3 ஆண்டில் இது இரண்டாவது துப்பாக்கி சூடு சம்பவம். ஆகும். இந்த சோக சம்பவத்தால் அதிபர் ஜாகோவ் மிலடோவிக் தெரிவித்துள்ளார். புத்தாண்டு விடுமுறையில் மகிழ்சியாக இருப்பதற்கு பதில், அப்பாவி மக்கள் உயிரிழப்பால் நாம் சோகத்தில் உள்ளோம் என அதிபர் மிலடோவிக் குறிப்பிட்டுள்ளார்.