புதுடெல்லி: 1901-க்குப் பின் இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு 2024 தான். அந்த வகையில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024-ல் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யஞ்சய் மொஹபத்ரா காணொலி மூலம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1901-ம் ஆண்டுக்கு பிறகு 2024-ம் ஆண்டுதான் வெப்பமான ஆண்டாக இருந்தது. கடந்த 123 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக அமைந்துள்ளது.
2024-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் சராசரியாக தரைக்காற்றின் வெப்பநிலை என்பது நீண்டகால சராசரியைவிட அதிகமாகப் பதிவானது. இது கடந்த 1901 – 2020 காலகட்டத்தில் பதிவானதை விட 0.65 (+0.65°C) டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
இயல்பைவிட கூடுதலாக.. மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 2025 ஜனவரியில் இயல்பைவிட கூடுதலாக வெப்பநிலை நிலவும் என்றும் வட மேற்கு, மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் மத்திய பகுதிகள் தவிர பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட வெப்பநிலை குறைவாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
விஞ்ஞானிகள் அறிவுரை: படிம எரிபொருள்களை எரிப்பதால் புவிவெப்பமடைதல் நடக்கிறது. அத்துடன் இல்லாமல், கூடுதல் வெப்பமானது வளிமண்டலத்திலும், கடல்பரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கதகதப்பான காற்றால் கூடுதலாக ஈரப்பதத்தை ஈர்க்க முடியும். கடல் வெப்பமடைதலால் கூடுதலாக அதிலிருந்து நீராவி கடத்தப்படும். இதனால் அதீத கனமழை சம்பவங்கள் அதிகரிக்கும்.
எனவே, படிம எரிபொருள்கள் எரிப்பதை நிறுத்த வேண்டும். 2025 ஆம் ஆண்டுக்கான மிக முக்கியமான உறுதிமொழியாக படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து மாற்று எரிபொருள் பயன்பாட்டை நோக்கி நகர்தல் இருக்க வேண்டும். அப்போதுதான், உலகை பாதுகாப்பான, நிலையான வசிப்பிடமாக மாற்ற வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.
ஏற்கெனவே ஐரோப்பாவின் காலநிலை கணிப்பு அமைப்பான கோப்பர்னிகஸ், 2024 ஆன் ஆண்டு தான் உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டு. மேலும், இந்த ஆண்டு தான் முதன்முறையாக தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சர்வதேச புவி மேற்பரப்பு வெப்ப சராசரியைவிட 1.5 டிகிரி செல்சியஸைவிட அதிக வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதனால் இந்த ஆண்டு உலகளவில் 41 நாட்கள் அதிக வெப்பமான நாளாக அமைந்தன. இதுவே கடந்த ஆண்டு 26 நாட்களாக இருந்தது எனத் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.